

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, 4 நிமிடப் பிரச்சாரத்தில் 42 முறை அம்மா புராணம் பாடியதால், அவரது பேச்சைக்கேட்க கூடிய பொதுமக்கள் சலிப்படைந்தனர்.
திண்டுக்கல் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து மேயர் வி.மருதராஜ், நகரச் செயலர் பாரதிகண்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார். திண்டுக்கல் நாகல நகரில் வெண்ணிற ஆடை நிர்மலா பேசியது:
சில அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தனித்து செயல்பட முடியாது. அனைத்து நிதி ஒதுக்கீடு விஷயத்திற்கும் மத்திய அரசை நாடியே இருக்க வேண்டிய உள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் பல உரிமைகளை முடக்கி போட்டுள்ளது. காவிரிப் பிரச்சினை முதல் இலங்கைத் தமிழர், முல்லைப்பெரியாறு அணை, மீனவர் பிரச்சினை என தமிழகத்தின் அனைத்து உரிமை பிரச்சினைகளிலும் மத்திய காங்கிரஸ் அரசு, தமிழகத்துக்கு பாதகமான முடிவுகளைத்தான் எடுத்துள்ளது.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க கண்டிப்பாக அ.தி.மு.க. இந்தமுறை வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க.வில் தகுதியில்லாத வேட்பாளர்கள், பணம் வழங்கி வேட்பாளராகியுள்ளனர் என கருணாநிதியின் பிள்ளையே கூறியுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைமறைவில் பணபேரம் செய்துவிட்டு கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் வந்தால் எப்படி நாட்டுக்கு நல்லது செய்வர். இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
வெண்ணிற ஆடை நிர்மலா, நாகல்நகரில் வெறும் 4 நிமிடம் மட்டுமே பிரச்சாரம் செய்தார். அந்த 4 நிமிடப் பிரச்சாரத்தில் வார்த்தைக்கு வார்த்தை 42 முறை அம்மா புராணம் பாடியதால் அவரது பேச்சைக்கேட்க கூடிய மக்கள் சலிப்படைந்தனர்.