

உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளதாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை (கேஎம்சி) டீன் டாக்டர் குணசேகரன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தைச் சேர்ந்த கருணா (26),ராஜேஸ்வரி (24) தம்பதியின் இரண்டாவது குழந்தை ராகுலுக்கு பிறந்த இரண்டரை மாதங்க ளில் உடலில் திடீரென தீக்காயங் கள் ஏற்பட்டன. அக்குழந்தைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணப்படுத் தப்பட்டது. இந்நிலையில் ராஜேஸ் வரிக்கு கடந்த 9-ம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களில், குழந்தையின் உள்ளங்கால்களில் தானாகவே தீக்காயங்கள் ஏற்பட்டன. அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தையை அனுமதித்து, டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழந்தையின் ரத்தம், சிறுநீர், வியர்வை உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குணசேகரன் கூறியதாவது:
உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகி வருகின்றன. சிறுநீர், ரத்தம், வியர்வை ஆய்வு செய்ததில் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி டாக்டர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற் றோருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.