

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆனந்த் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த 19-ம் தேதி அதிமுக வேட்பாளர் வளர்மதி மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் திமுக வேட்பாளர் என்.ஆனந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திருச்சி சோழன் நகரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான மனோகரனிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் திருச்சி தெற்கு மாவட்டச் செயலர் கே.என்.நேரு, கொள்கை பரப்புச் செயலர் திருச்சி சிவா, புதுக்கோட்டை மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மகன் ஹபிபுர் ரகுமான் ஆகிய 4 பேர் சென்றனர். திமுக சார்பில் மாற்று வேட்பாளராக அந்தநல்லூர் ஒன்றியச் செயலர் மல்லியம்பத்து கதிர்வேலு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக காலை 10.30 மணிக்கு தில்லை நகர், சாஸ்திரி ரோட்டில் உள்ள திருச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணிக்குழு தலைவர் கே.என்.நேரு தலைமையில் மனு தாக்கல் செய்வதற்கு ஆனந்த் ஊர்வலமாக புறப்பட்டார். இதில், அண்டை மாவட்ட திமுக செயலர்கள், மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகே திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.
இதுவரை 7 மனுக்கள் தாக்கல்
அதிமுக வேட்பாளர் வளர்மதி, அதிமுக மாற்று வேட்பாளராக கோவிந்தன், திமுக வேட்பாளர் ஆனந்த், திமுக மாற்று வேட்பாள ராக கதிர்வேலு, சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், மனோகரன், திருவேங்கடம் ஆகிய 7 பேர் நேற்றுவரை மனு தாக்கல் செய்துள்ளனர்.