Last Updated : 30 Jan, 2015 04:03 PM

 

Published : 30 Jan 2015 04:03 PM
Last Updated : 30 Jan 2015 04:03 PM

மதசார்பின்மை பிரச்சினையில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்?- பிருந்தா காரத் கேள்வி

அரசியல் சாசனத்தின் மதிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு, விவாதப் பொருளாக்கப்படும்போது நாட்டின் பிரதமர் அமைதி காப்பது சரியான அணுகுமுறை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மதசார்பற்ற இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்கள்' (The Challenges and Threats to Secular India) என்ற கருத்தரங்கில் பேசிய பிருந்தா காரத் இவ்வாறு தெரிவித்தார்.

குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது. இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.

இதை நேரடியாக சுட்டிக்காட்டாமல் பேசிய பிருந்தா காரத், "அரசியல் சாசனத்தின் மதிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு, விவாதப்பொருளாக்கப்படும்போது நாட்டின் பிரதமர் அமைதி காப்பது சரியான அணுகுமுறை இல்லை.

மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் அரசியல் சாசனத்தின் முகவுரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எப்போதும், எல்லாவாற்றுக்கும் பேசும் நம் பிரதமரோ அரசியல் சாசனத்தின் மதிப்பு விமர்சிக்கப்படும்போது மவுனியாக இருக்கிறார்" என்றார்.

அதேபோல், காந்தியைக் கொன்ற கோட்சேவை மகிமைப்படுத்தும் வகையில் சில இந்துத்துவா அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஏற்புடையதல்ல.

இந்தியர்கள் அனைவரும் காந்தியின் தியாகத்தை மகிமைப்படுத்தும்போது, ஒரு சிலர் மட்டும் அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவை மகிமைப்படுத்த முயற்சிக்கின்றனர் என பிருந்தா வருத்தம் தெரிவித்தார்.

இது போன்ற இந்துத்துவா அமைப்புகள் செயல்பாடுகள் தலைதூக்கி வருவதால்தான், அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "மதசார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்" என்று கூறியிருக்கிறார் என சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x