

கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் சிறுவர், சிறுமிகள் விழுந்து இறப்பதைத் தடுக்க உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ள வழி காட்டுதல்களை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விராட்டிப்பத்து பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.தனசேகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
ஆழ்குழாய் கிணறு அமைப்பவர்கள், தண்ணீர் இல்லாதபோது அதை மூடாமல் விட்டுவிடுகின்றனர். அப்பகுதியில் விளையாடச் செல்லும் சிறுவர்கள் தெரியாமல் ஆழ்குழாய் கிணறுகளில் விழுந்து உயிரிழக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மதுமிதா(3) என்ற சிறுமி ஏப்.1-ம் தேதி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதில், ஆழ்குழாய் கிணறு அமைக்க 15 நாட்களுக்கு முன்பே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் பயன்படுத்தாமல் விடும் ஆழ்குழாய் கிணறுகளை தரைமட்டத்துக்கு கல், மண் போட்டு நிரப்ப வேண்டும், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடை பெறும்போது அந்த இடத்துக்குள் யாரும் நுழையவிடாமல் தடுக்க தடுப்பு அமைக்க வேண்டும், கிணற்றை இரும்பு மூடி கொண்டு மூட வேண்டும், பயன்பாட்டில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத ஆழ் குழாய்களை கண்டறிந்து அவற்றை முறைப்படுத்தவும், பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை மூடவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருப்பதால் ஆழ்குழாய் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அவர்களது உயிரை காப்பாற்ற ஆழ்குழாய் கிணறு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை அமல்படுத்தவும், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தமிழகத்தில் ஆழ்குழாய் கிணறுகளை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கைபெறவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி ஆஜரானார்.
மனுவுக்குப் பதில் அளிக்கு மாறு தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், வருவாய் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.