

தாளவாடியை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க கோரி தமிழக கர்நாடக மாநில் எல்லையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக சலுவளி கட்சி மாநில தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக சலுவளிகட்சி மாநில தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கர்நாடக - தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடிக்கு 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நேற்று வந்தனர்.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சலையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் கன்னடம் பேசுவோர் 15 லட்சம் பேர் உள்ளனர். தமிழக - கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகரை ஒட்டியுள்ள தாளவாடியில் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
இப்பள்ளிகளை மூடிவிட்டு, இங்கு பணிபுரிந்த கன்னட மொழி ஆசிரியர்களை தமிழக அரசு வீட்டுக்கு அனுப்பியுள்ளது. தற்போது, கன்னடத்துடன் தமிழையும் ஒரு பாடமாக எடுத்து மாணவர்கள் படித்து வருகின்றனர். கன்னடப்பள்ளியில் தமிழை நீக்க வேண்டும். தாளவாடியை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும். கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசின் சலுகைகள் முழுமையாக வழங்க வேண்டும்.
கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்காவிட்டால், கர்நாடக மாநிலத்தில் செயல்படும் தமிழ்வழிக்கல்வி பள்ளிகளை மூடக்கோரி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து தமிழக எல்லையில் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இதனால், தமிழகம் - கர்நாடகம் இடையே சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.