

அடுக்குமாடி கட்டிட தளபரப்பு குறியீட்டை (எப்எஸ்ஐ) அதிகரிக்க போக்கு வரத்து காவல்துறை இணை ஆணைய ரிடம் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் (என்ஓசி) பெறத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
இதுதொடர்பாக பிரின்ஸ் பவுண்டேஷன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டல் இருந்த இடத்தில் 36 கிரவுண்டில் 18 மாடிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுகிறோம். இதற்காக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இந்திய விமான நிலைய ஆணையக்குழு ஆகியவற்றிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறோம்.
இந்நிலையில், பிரீமியம் தளபரப்பு குறியீட்டை 3.5 ஆக அதிகரிக்க அனுமதி கோரி, பன்னடுக்கு மாடிகளுக்கு அனுமதி வழங்கும் சிறப்புக் குழுவிடம் விண்ணப்பித்தோம். தளபரப்பு குறியீட்டை அதிகரித்தால், அந்த இடத்தில் 54 வீடுகளைக் கூடுதலாக கட்ட முடியும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த சிறப்புக் குழு, போக்குவரத்து காவல்துறை இணை ஆணையரிடம் (வடக்கு) ஆட்சேபம் இல்லா சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், சான்றிதழ் தர இணை ஆணையர் மறுத்துவிட்டார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் என்று அதற்கு அவர் காரணம் கூறினார். எனவே, ஆட்சேபம் இல்லா சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில், போக்குவரத்து காவல்துறை இணை ஆணையரிடம் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. 9 பேர் கொண்ட சிறப்புக் குழுவில் இவருக்கு மட்டும் தனி அதிகாரம் இல்லை. அத்துடன் இவர் ஒப்புதலைப் பெற்றுதான் குழு முடிவெடுக்கும் என்று ஏன் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.
தளபரப்பு குறியீட்டை அதிகரிக்க ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து குழு கூட்டத்திலேயே போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தெரிவித்திருக்கலாம். அதை குழு ஏற்றுக் கொண்டு மனுதாரர் விண்ணப்பத்தை நிராகரித்திருக்கலாம். மனுதாரர் 101 குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்கெனவே அனுமதி வாங்கிவிட்டார். இப்போது தளபரப்பு குறியீட்டை அதிகரித்து மேலும் 54 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கோரியுள்ளார். அவ்வாறு கூடுதலாக வீடுகள் கட்டும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் கூறியுள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கிய பிறகு, போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதை ஏன் அவர் கருத்தில் கொள்ளவில்லை?
தளபரப்பு குறியீட்டை அதிகரிக்க போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் அனுமதியைப் பெறுவதற்கு வழிமுறை எதுவும் இல்லாத நிலையில், பன்னடுக்கு மாடிகள் கட்டுதல் போன்ற பெரிய திட்டங்களை அவரது தனிப்பட்ட முடிவுக்கு விடுவது சரியல்ல. எனவே, தளபரப்பு குறியீட்டை அதிகரிக்க போக்குவரத்து காவல்துறை இணை ஆணையரிடம் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.