ரூ.20 லட்சம் செலவு செய்தும் குணமாகவில்லை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெற்றோர் தற்கொலை - வியாசர்பாடியில் சோகம்

ரூ.20 லட்சம் செலவு செய்தும் குணமாகவில்லை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெற்றோர் தற்கொலை - வியாசர்பாடியில் சோகம்
Updated on
1 min read

மகனின் புற்றுநோயை குணப்படுத்த முடியாததால், அவனுடன் சேர்ந்து பெற் றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வியாசர்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி கோபி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கமலக் கண்ணன் (54). மனைவி கவுரி (48). இவர்களின் மகன் சதீஷ்குமார் (23). தனியார் நிறுவனம் ஒன்றில் கமலக் கண்ணன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது மகன் சதீஷ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். லட்சக் கணக்கில் பணம் செலவழித்து சிகிச்சை செய்தும் சதீஷ்குமாரை குணப்படுத்த முடியவில்லை. இதனால் அவரது பெற்றோர் மன வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கமலக்கண்ணன், கவுரி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கமலக்கண்ணனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அவரது தம்பி ராமகிருஷ்ணன் நேற்று காலை அவர்களின் வீட்டுக்கு சென்றபோது, மூவரும் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி செம்பியம் போலீஸுக்கு தகவல் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், கமலக்கண்ணன் எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், “மகனின் நோயை குணப்படுத்த ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலவழித்தோம். எந்த பலனும் இல்லை. மகன் தினமும் நோயால் அவதிப்படுவதை எங்களால் பார்க்க இயலவில்லை. தினமும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே வேறு வழியின்றி 3 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பா, அம்மா, மகன் 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வியாசர்பாடியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in