Published : 06 Dec 2014 08:46 AM
Last Updated : 06 Dec 2014 08:46 AM

தங்கும் அறையில் ஒட்டுக் கேட்பு கருவி?- அமைச்சரின் அறைக்கு மாறிய சகாயம்; அதிகாரிகளிடம் விசாரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மதுரையில் கிரானைட் மோசடி குறித்து விசாரிக்கும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உள்ளிட்ட குழுவினர் தங்கியிருந்த அறையில், ஒட்டுக் கேட்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததையடுத்து, உடனடியாக சகாயம் குழுவினர் வேறு அறைகளுக்கு மாறினர்.

சகாயம் உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சகாயத்தின் செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், தங்கும் அறையில் மைக் பொருத்தி ஒட்டுக் கேட்கப் படுவதாக செய்தி இருந்ததாம். இதையடுத்து, தனது உதவியா ளரை வைத்து அறை முழுவதும் சகாயம் சோதனையிட்டார். பின்னர், வேறு அறையை தனக்கு ஒதுக்குமாறு சுற்றுலா மாளிகை அலுவலர்களிடம் கேட்டார்.

தொடர்ந்து, கீழ் தளத்தில் இருந்த ஒரு அறையை ஒதுக்குமாறு சகாயம் கேட்டதற்கு, அந்த அறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்காக ஒதுக்கிவைத்திருப்பதாக சுற்றுலா மாளிகை அலுவலர்கள் கூறினராம். அதற்கு, அந்த அறையை ஒதுக்காவிடில், வெளியே சென்று வாடகை அறையில் தங்கப் போவதாக சகாயம் தெரிவித்தார். இதையடுத்து, சுற்றுலா மாளிகை அலுவலர்கள் அமைச்சர் அறையை சகாயத்துக்கு ஒதுக்கித் தந்தனர்.

சகாயம் ஏற்கெனவே தங்கியிருந்த அறைக்கு அவரது குழுவினர் இடம் மாறினர்.

பின்னர், நேற்று காலை பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திலும் முழுமையாக சோதனை செய்த பின்னரே சகாயம் விசாரணையைத் தொடங்கினார்.

‘உடந்தை அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும்’

அங்கு, கிரானைட் முறைகேடு குறித்து 3-வது நாளாக வெள்ளிக்கிழமை சகாயம் விசாரணை நடத்தியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை நகரச் செயலர் சி. ராம கிருஷ்ணன் உட்பட பலர் மனு அளித்தனர். மனு குறித்து ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மதுரை கனிமவளத் துறை வட்டாட்சியர் ஒருவர் 3 குவாரி களை குத்தகைக்கு எடுத்துள்ளார். கிரானைட் அதிபர்களின் மோசடிக்கு வருவாய்த் துறை, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள், கனிமவளத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்து பலன் அடைந்துள்ளனர். எனவே, அவர்களிடமும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

நடவடிக்கை கோரி போலீஸாரும் மனு

மதுரை தல்லாகுளம் எஸ்ஐ ராதாகிருஷ்ணன், அண்ணாநகர் முதல்நிலைக் காவலர் முருகேசன் ஆகியோர் அளித்த மனுவில், ‘2001-ல் மதுரை காவல் ஆணையராக ஜாங்கிட் பணியாற்றியபோது காவலர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு புது தாமரைப்பட்டியில் வீட்டுமனைகள் கிடைத்தன. நாங்கள் நிலத்தை சென்று பார்த்தபோது கிரானைட் கற்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதனருகிலேயே வெடி வைத்து கற்களை எடுத்தனர். ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கிய அந்த நிலத்தை ரூ.55 ஆயிரத்துக்கு மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர். நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸாரே சகாயத்திடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x