

காரப்பேட்டை அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவ, மாணவிகள் சேர்க்கையில் குளறுபடி நிலவுகிறது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியில்லாமல் மருத்துவ இயற்பியல் துறை செயல்படுவதை நிர்வாகம் மறைத்ததாக புகார் தெரிவித்து, மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, உண்ணாவிரதத் தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் செயல் பட்டு வரும் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில், முதுகலை மருத்துவ இயற்பி யல் துறையில் 13 மாணவர்கள் படித்து வருகிறோம். மருத்துவமனை நிர்வாகம் முதுகலை மருத்துவ இயற்பியல் துறை வகுப்புகள் நடத்த முறையான அனுமதி பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளது.
மேலும், இத்துறையின் தலைவராக உள்ள காளிதாஸ் என்பவர், மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார். மாணவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதோடு, எதிர்த்து பேசும் மாணவர்களிடம் இன்டனல் மார்க் வழங்கமாட்டேன் என மிரட்டுகிறார். மார்க் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார். நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால், துறை தலைவர் காளிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம்.
மாலையில் எங்களை சந்தித்த மருத்துவமனை இயக்குநர் கிரிதரன், துறை தலைவரை பணியிட மாற்றம் செய்வதாகவும், விரைவில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெறப்பட்டு விடும் எனவும் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மருத்துவ இயற்பியல் துறை தலைவர் காளிதாஸிடம் கேட்ட போது, ‘மாணவ, மாணவிகள் நலனில் எங்களுக்கும் அக்கறை உள்ளது. என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வீணாக புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் புகாரில் உண்மையில்லை’ என்றார்.
இதுகுறித்து, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: மருத்துவமனையில் கடந்த 2008-ம் ஆண்டு முறையான அனுமதியோடு மருத்துவ இயற்பியல் துறை தொடங்கப்பட்டது. பின்னர், பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாதது காரணமாக, அதே ஆண்டு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அடுத்த 3 மாத காலத்துக்குள், அனுமதி கிடைத்துவிடும். அதனால், மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக, மருத்துவத் துறை நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.