30 மாவட்ட திமுக செயலாளர் தேர்தல் அறிவிப்பு: சென்னையில் 13 மாவட்டங்களுக்கு இன்று வாக்குப்பதிவு

30 மாவட்ட திமுக செயலாளர் தேர்தல் அறிவிப்பு: சென்னையில் 13 மாவட்டங்களுக்கு இன்று வாக்குப்பதிவு
Updated on
2 min read

திமுக உட்கட்சி தேர்தலில் 30 மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தல் சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று ஒரே நாளில் 13 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் மாவட்ட நிர்வாகங்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் 578 ஒன்றியங்கள், 129 நகரங்கள், 122 பகுதிகள், 538 பேரூர் பகுதிகள் அடங்கும். கடந்த ஜூலை முதல் உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. கிளை, ஊராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு பெரும்பாலான இடங்களில் தேர்தல் முடிந்துவிட்டன. சில இடங்களில் நடந்த வன்முறை காரணமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் பதவியை பிடிப்பதில் கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர் பதவிக்கு புதிய நிபந்தனையை கட்சித் தலைமை விதித்தது. நீண்ட நாட்களாக இந்தப் பதவியில் இருப்பவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால், அவர்களோ அவர்களது குடும்பத்தினரோ சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சீட் கேட்கக் கூடாது என்ற உறுதிமொழி பத்திரம் கோரப்பட்டது. இதில், 18 மூத்த நிர்வாகிகள் கையெழுத்திட்டு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையே, 35 மாவட்டங் களுக்கான செயலாளர்கள் சுமூகமான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற 30 மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுகவின் 14-வது கட்சித் தேர்தலில் மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள் (1 பொது, 1 ஆதிதிராவிடர் அல்லது மலை வாழ் வகுப்பு, 1 மகளிர்) பொரு ளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 19, 21, 22-ம் தேதிகளில் சென்னையில் நடக்கும். தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு 19-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடக்கிறது. மாலை 3 மணிக்கு நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களுக்கு அண்ணா அறிவாலயத்திலும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை தெற்கு மாவட்டங்களுக்கு ராயபுரம் அறிவகத்திலும் தேர்தல் நடக்கிறது.

21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவாரூர், கரூர், தேனி, தருமபுரி மாவட்டங்களுக்கும் பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு மாவட்டங்களுக்கும் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடக்கிறது. 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும் பிற்பகல் 3 மணிக்கு ராமநாத புரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல் வேலி மத்திய மாவட்டங்களுக்கும் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் க.அன்பழகன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in