Last Updated : 08 Dec, 2014 03:34 PM

 

Published : 08 Dec 2014 03:34 PM
Last Updated : 08 Dec 2014 03:34 PM

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெ. மேல்முறையீடு: 72 பைகளில், 2.15 லட்சம் பக்க ஆவணங்கள் தாக்கல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான சுமார் 2.15 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கர்நாட‌க உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஜாமீன் வழங்கியது. மேலும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீடு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா தரப்பு சுறுசுறுப்பு

இதைத் தொடர்ந்து மேல்முறையீடு வழக்கை விரைந்து முடிக்க ஜெயலலிதா தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. எனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களின் நகல்க‌ளையும் கோரினர். இதற்காக ரூ.98 ஆயிரம் கட்டணமாக செலுத்தப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களை நீதிமன்ற ஊழியர்கள் கடந்த அக்டோபர் 20-ம் தேதியில் இருந்து நவம்பர் 24-ம் வரை நகலெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆவணங்களுக்கு எண்கள் குறிக்கப்ப‌ட்டு 5 கட்டங் களாக சுமார் 4 லட்சம் பக்கமுள்ள ஆவணங்களை ஜெயலலிதா தரப்பிடம் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல்முறை யீடுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் தொகுக்கப்பட்டன.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் ஆகியோர் ஆவணங்களை கவனமுடன் தொகுத்தனர். குறிப்பாக நீதிபதி குன்ஹா ஏற்க மறுத்த வருமான வரித்துறை சார்ந்த ஆவணங்களை முழுமையாக சேர்த்துள்ள‌னர். இந்தப் பணியில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நல்ல நேரத்தில் தாக்கல்

மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன் சென்னையில் இருந்து வேன் மூலம் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு கொண்டு வந்தனர். நல்ல நேரத்துக்காக காத்திருந் தவர்கள், சரியாக 12.15 மணிக்கு ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத் துக்கு அருகில் கொண்டு சென்றனர். 25 கிலோவுக்கும் அதிக எடையுள்ள 72 பைகள் நிறைந்த ஆவணங்களை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, வழக்கறிஞர்கள் பரணிகுமார், செல்வகுமார் உள்ளிட்ட 20 பேர் தூக்கிச் சென்றனர்.

அதில் ஜெயலலிதா தரப்பில் 174 தொகுதிகளும், சசிகலா, சுதாகரன் ஆகிய இருவருக்கு தலா 171 தொகுதிகளும், இளவரசிக்கு 170 தொகுதிகளும் அடங்கிய ஆவணங்கள் இருந்தன. மொத்தத் தில் மேல்முறையீடுக்காக 2.15 லட்சம் பக்கங்களில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எண்கள் ஒதுக்கீடு

ஜெயலலிதா தரப்பில் திங்கள் கிழமை தாக்கல் செய்த 2.15 லட்சம் பக்க ஆவணங்கள் அடங்கிய புத்தகங்களை பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பெற்றுக்கொண்டு எண்கள் வழங்கினர். இதில் சொத்துக் குவிப்பு வழக்கில் பெறப்பட்ட சாட்சியங்கள், வாக்கு மூலங்கள், குறுக்கு விசாரணை, குற்றவாளிகளின் விளக்கம், தீர்ப்பு உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் இருந்தன. அவற்றை முழுமையாக சரிபார்த்து முத்திரையிட குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிவித்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற துணைபதிவாளர் ராகவேந்திர உபாத்யாயா ஆவணங்களை பெற்றுக்கொண்டதற்கான சான்றி தழை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு முறையே குற்றவியல் மேல்முறையீடு வழக்கு எண்கள் 835,836,837,838 ஒதுக்கப்பட்டன.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஆவணங்கள் தாக்கல் செய்ததை ஜெயலலிதா தரப்பு வரும் 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள்.அதனைத் தொடர்ந்து வழக்கை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x