

உத்தபுரம் மோதல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு 59 பேர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், உத்தபுரத்தைச் சேர்ந்த எம். தினேஷ்குமார், டி.ராமர் உள்பட 59 பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு:
உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலை எங்கள் சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர் வழிபாட்டு உரிமை கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த ஆண்டு பங்குனித் திருவிழாவில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடந்த ஏப். 7-ம் தேதி வருவாய் அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, மற்றொரு பிரிவினர் மோதலில் ஈடுபட்டனர். தாசில்தார் வாகனம் மீது கல் வீசப்பட்டது.
ஆனால், கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின்பேரில் எழுமலை போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு கேட்டுக் கொண்டதால் விசாரணையை ஏப். 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.