

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொமுச, சிஐடியு உட்பட 11 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் 11 தொழிற்சங்கங்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘போக்குவரத்துக் கழகங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைத்து பஸ்கள் ஓடுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத்தான் அரசு திறக்க வேண்டுமே தவிர, சிறைக் கதவுகளை அல்ல’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறும்போது, ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. ஏதோ ஒரு தொழிற்சங்கம் மட்டுமல்ல, மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
எனவே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்’’ என்றார்.
சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் எம்எல்ஏ கூறும்போது, ‘‘புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து உயர்மட்ட அளவில் அழைத்துப் பேச முதலில் கமிட்டி அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் இடம் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் 15 சதவீத பஸ்களே இயக்கப்பட்டுள்ளன. புதியதாக தேர்வு செய்யப்பட்ட, முழுமையாக பயிற்சி பெறாத ஓட்டுநர்கள், நடத்துநர்களைக் கொண்டு பஸ்களை இயக்குகின்றனர். தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்து வருகின்றன. பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வராவிட்டால் போராட்டங்கள் தொடரும்’’ என்றார்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத்தான் அரசு திறக்க வேண்டுமே தவிர, சிறைக் கதவுகளை அல்ல.