Published : 04 Dec 2014 08:42 AM
Last Updated : 04 Dec 2014 08:42 AM

கிரானைட் முறைகேடுகள் குறித்து மதுரையில் விசாரணையை தொடங்கினார் சகாயம்: பொதுமக்களிடம் இன்று மனுக்களை பெறுகிறார்

கிரானைட் முறைகேட்டால் விவசாயம், நீர்நிலைகள், வீட்டு மனைகள், பஞ்சமி நிலங்களின் பாதிப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் மதுரையில் நேற்று விசாரணையை தொடங்கினார். இன்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு கிரானைட் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக் கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உ.சகாயத்துக்கு உத்தர விட்டதையடுத்து, புதன்கிழமை சகாயம் மதுரை வந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்துக்கு வந்த சகாயம் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கனிம வளம் உதவி இயக்குநர்கள் முருகானந்தம், சுதர்சனம், மண்ணியல் துறை அதிகாரிகள் பெருமாள் ராஜா, ரமேஷ், அறிவியல் நிபுணர்கள் ஹேமா, தேவசேனாதிபதி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள் அருணாச்சலம், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் ஆய்வு குறித்து ஆலோசித்தார். பின்னர் கனிம வளம், வேளாண்மை, பொதுப் பணித் துறை, கால்நடை துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கிரானைட் முறைகேடு தொடர்பாக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார்.

இதுகுறித்து சகாயம் கூறியதாவது: இன்று (வியாழன்) பகல் 11 மணி முதல் 1.30 மணி வரையிலும், மதியம் 3 முதல் 5.30 மணி வரை மதுரையில் பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்கள் தன்னை நேரில் சந்தித்து கிரானைட் புகார் மனுக்களை அளிக்கலாம் என்றார்.

கிரானைட் முறைகேடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியனிடம் ஆலோசனை நடத்துகிறார் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x