

கோட்டை ரயில் நிலையம் அருகில் மின்சார ரயிலில் பெண்ணிடம் செயினை பறித்த கொள்ளையன், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றான்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முனீஸ்வரி (25). மென்பொருள் பொறியாளர். தாம்பரத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார் முனீஸ்வரி. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி வந்து கொண்டிருந்தார் முனீஸ்வரி.
கோட்டை - கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்தபோது பெண்கள் பெட்டியில் முனீஸ்வரி மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார். அப்போது கணவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்த பெட்டியில் மறைந்திருந்த கொள்ளையன் ஒருவன், முனீஸ்வரி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தார். அதைத் தடுக்க கொள்ளையனுடன் முனீஸ்வரி போராடியும் முடியவில்லை.
மேலும், முனீஸ்வரி வைத்திருந்த கைப்பையையும் கொள்ளையன் பறிக்க முயற்சி செய்தான். அதை கொடுக்காமல் முனீஸ்வரி இறுக்கி பிடித்திருந்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டான். பின்னர் மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கொள்ளையனும் குதித்து தப்பிச் சென்றுவிட்டான். இந்த சம்பவங்கள் அனைத்தும் முனீஸ்வரியின் கூச்சலால் செல் போன் மூலம் கணவர் நாகராஜ னுக்கும் கேட்டது. அவர் நேரில் வந்து முனீஸ்வரியை மீட்டு மருத்து வமனையில் சேர்த்தார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் முனீஸ் வரியின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையன் வட மாநில இளைஞர் என்று போலீஸாரிடம் முனீஸ்வரி தெரிவித்துள்ளார்.
"பார்க் - கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் புதர்கள் வளர்ந்து, விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருக்கும். இந்த இடத்தில் ரயில்கள் எப்போதும் மெதுவாக செல்லும். இதனால் ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் கொள்ளையர்களுக்கு மிக எளிது. இரவு 9 மணிக்கு பிறகு இந்த வழியில் செல்லும் ரயில்களின் பெண்கள் பெட்டியில் விரல் விட்டு எண்ணும் அளவும் மட்டுமே பெண் பயணிகள் இருப்பார்கள். இதனால் அந்த பெட்டியில் ஏறி கொள்ளையடிப்பது கொள்ளையர்களுக்கு மிக எளிதாக உள்ளது. இருட்டான இடமாக இருப்ப தால் தப்பிச் செல்வதும் எளிது. இரவுமற்றும் கூட்டம் இல்லாத நேரத்தில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்யாமல் பொது பெட்டியில் ஏறுவது சிறந்தது" என்று மின்சார ரயில் பயணிகள் தெரிவித்தனர்.