

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங் கள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகளும், இரவு உணவுடன் மதுவும் பரிமாறப்படுவதும் நடைபெறும். இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பதுண்டு. இதனால் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்துக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்குவதற்காக ஓட்டல் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர போலீஸார் ஆலோசனை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார், இணை ஆணையர் அருண், துணை ஆணையர் சிவானந்தம் மற்றும் 46 ஓட்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகில் விழா கொண்டாடக்கூடாது. அன்று இரவில் நீச்சல் குளத்தில் குளிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. இரவு 1 மணிக்குள் கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும். பெண்களிடம் யாரும் தவறாக நடந்துகொள்ளாத வகையில் தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கொண்டாட்டம் நடைபெறும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது கொடுக்கக் கூடாது. மது போதையில் இருப்பவர்களை விழா முடிந்ததும் வீடுகளில் கொண்டு சேர்க்க வாகன வசதிகளை ஓட்டல் நிர்வாகமே செய்ய வேண்டும். மது அருந்தியவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 15 கட்டுப்பாடுகளை நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் விதித்துள்ளனர்.