

பாபர் மசூதி வழக்கை வாபஸ் பெற்றதாகக் கூறி சிலர் குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர் என்றார் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாஹ்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி 22 ஆண்டுகளுக்கு முன்பு தகர்க்கப்பட்ட பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, லிபரான் கமிஷன் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.
கடந்த சில தினங்களாக பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக வழக்கு நடத்தி வரும் இஸ்லாமிய பெரியவர் ஆசிம் அன்சாரி, தான் நீதிமன் றத்தில் நடத்திவரும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களை சில ஊடகங்கள் மூலம் இந்துத்துவா சக்திகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அது முழுக்க பொய்யான செய்தி.
அவரது வழக்கறிஞர் சாலிக் அகமதுவிடம் பேசியபோது, 96 வயதான ஆசிம் அன்சாரி இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்வு எடுத்து வருவதாகவும் தனக்குப் பின் இந்த வழக்கை அவரது மகன் இல்யாஸ் தொடர்ந்து நடத்தச் சொல்லி ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை ஆசிம் அன்சாரி வாபஸ் வாங்கினார் எனச் சொல்லி குழப்பம் விளைவிக்கவும், பிரச்சினையைத் திசைதிருப்பவும் சில சக்திகள் முயற்சிக்கின்றன என்றார் அவர்.