Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டில் விஜயகாந்த்: அரசியலுக்கு அப்பாற்பட்ட சகோதர பாசத்தின் வெளிப்பாடு

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியிலுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மாலை சென்றார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கு நடைபெற்ற சந்திப்பில் சகோதர பாசம் வெளிப்பட்டது.

கலிங்கப்பட்டியிலுள்ள வைகோவின் வீட்டுக்கு முதல்வர் ஜெய லலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வந்து சென்றி ருக்கிறார்கள். தற்போது, பாஜக கூட்டணியில் மதிமுக-வும், தேமுதிக-வும் இணைந்திருக்கும் நிலையில் வைகோ, விஜயகாந்த் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வைகோ தாயிடம் ஆசி

திருநெல்வேலியில் செவ் வாய்க்கிழமை 2-ம் கட்டமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த், புதன்கிழமை தென்காசி தொகுதிக்கு உள்பட்ட சங்கரன்கோவிலில் தனது பிரச் சாரத்தை மேற்கொண்டார். அவ் வாறு பிரச்சாரத்தை தொடங்கும் முன், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியிலுள்ள வைகோ வீட்டுக்கு விஜயகாந்த் புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு சென்றார். அவரை வரவேற்க அப்பகுதியில் மதிமுக - தேமுதிக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

விஜயகாந்தை வாசலில் வந்து வைகோவும், அவரது தம்பி ரவிச்சந்திரனும் வரவேற்றனர். விஜயகாந்துக்கு ரவிச்சந்திரன் ரோஜா மாலை அணிவித்தார். வீட்டுக்குள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வைகோவின், 92 வயதான அம்மா மாரியம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து, அவரிடம் விஜயகாந்த் ஆசி பெற்று உரையாடினார்.

விருந்து உபசாரம்

பின்னர் மனைவி ரேணுகாதேவி மற்றும் குடும்பத்தாரை விஜய காந்துக்கு, வைகோ அறிமுகம் செய்து வைத்தார். தென்காசி தொகுதி மதிமுக. வேட்பாளர் சதன்திருமலைகுமார், மாவட்ட மதிமுக. செயலாளர் ப.சரவணன், இணையதள ஒருங்கிணைப் பாளர் முகமது அலி ஆகி யோரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, விஜயகாந்துக்கு விருந்து உபசாரம் நடைபெற்றது. அல்வா, முந்திரி பருப்பு, தோசை, வடை, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, காபி ஆகியவை பரிமாறப்பட்டன. விருந்துக்குப் பின் வீட்டில் இருந்த புகைப்படங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்.

இலங்கைக்கு சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, வைகோ சந்தித்த புகைப்படத்தைக் காட்டி, அது தொடர்பான விபரங்களை வைகோ தெரிவித்தார். அதை விஜயகாந்த் உன்னிப்பாக கவனித் தார். வைகோவின் பேரனுக்கு பிரபாகரன் என்று பெயரிடப் பட்டுள்ளது. அவரையும் விஜய காந்துக்கு, வைகோ அறிமுகம் செய்து வைத்தார்.

மாலை 4.45 மணியளவில் வைகோவும், விஜயகாந்தும் தனி அறையில் அமர்ந்து, 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். இச்சந்திப்புக்குப்பின் வீட்டிலுள் ளவர்களிடம் விடைபெற்று வெளியேவந்த விஜயகாந்த், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசினார்.

விஜயகாந்த் - வைகோ சந்திப்பின்போது வைகோவின் வீட்டுக்கு முன் திரண்டிருந்த அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x