

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் (எம்சிசி) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான திரைப் பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘தி இந்து’ நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ரவி, திரை யரங்க உரிமையாளர் அபிராமி ராம நாதன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் பள்ளியில் 1989-ம் ஆண்டு படிப்பை முடித்த இயக்குநர் கவுதம் மேனன் கூறும்போது, “இங்கே வந்ததும் என் மனதில் பல நினைவலைகள் ஓடுகின்றன. இந்த மைதானத்தில் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடியபோது, என் தந்தை தூணின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது’’ என்றார்.
1963-ம் ஆண்டு இங்கு பள்ளிப் படிப்பை முடித்த ‘தி இந்து’ என்.ரவி பேசும்போது, “179 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியில் படித்தது பெருமையாக இருக்கிறது. இந்தப் பள்ளி, மாணவர்களை எப்போதும் பாசமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் நடத்தியிருக்கிறது. இங்கு பயின்ற விஷயங்கள், வாழ்க்கையில் பல இடங்களில் உபயோகமாக இருக்கிறது’’ என்றார்.
‘‘வாழ்க்கையை எதிர்கொள்ள எனக்கு நம்பிக்கை கொடுத்தது இந்தப் பள்ளிதான். நான் இதுவரை உருவாக்கப்பட்டதும், இனிமேல் உருவாக்கப்படுவதும் இந்தப் பள்ளியால்தான்’’ என்றார் அபிராமி ராமநாதன்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அருண் மாமென் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.