Published : 12 Dec 2014 11:45 AM
Last Updated : 12 Dec 2014 11:45 AM

அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பின்வாங்கக் கூடாது: அமைச்சர் ப.மோகன் அறிவுறுத்தல்

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் அரசு அதிகாரிகள் உரிய ஆவணங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பித்து தீர்வு பெற வேண்டும்.பின்வாங்கக் கூடாது என ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் வகையில் சென்னை உட்பட 9 இடங்களில் ரூ.105 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த குடியிருப்புகளை அமைப்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சி பகுதியில் திருப்போரூர்-கேளம்பாக்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 1.24 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலர் வீரசண்முகமணி, தொழிலாளர் ஆணையர் அமுதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நேற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது அதிகாரிகள் ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் தையூர், எழிச்சூர் மற்றும் படப்பை ஆகிய 3 இடங்களில் குடியிருப்புகளுக்காக நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில், தையூரில் மட்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 2 இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், வேறு இடங்களில் நிலம் தேர்வு செய்ய உள்ளதாக’ தெரிவித்தனர்.

இதைக் கேட்ட அமைச்சர் மோகன், ‘அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஏன் வேறு இடத்தை தேடுகின்றீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பிரச்சினையில் இருந்து பின் வாங்குவது தவறான செயலாகும். அரசு நிலம், அரசின் வளர்ச்சி திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலத்துக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய தீர்வு பெற வேண்டும். பின்வாங்கக் கூடாது’ என அறிவுறுத்தினார்.

பிறகு ‘தி இந்து’விடம் பேசிய அமைச்சர் ப.மோகன், ‘கட்டுமான தொழிலாளர் குடியிருப்புகளுக்காக முதற்கட்டமாக, கோவை, சேலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வருங்கால வைப்பு நிதியை, தொழிலாளர்கள் சிரமம் இன்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x