Published : 16 Dec 2014 11:25 AM
Last Updated : 16 Dec 2014 11:25 AM

சென்னை ஏடிஎம் காவலாளி கொலையில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கைது

சென்னை ஏடிஎம் காவலாளியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேஸில் அடைத்து விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி ஓடையில் வீசிய சம்பவம் தொடர்பாக விருத்தாசலத்தைச் சேர்ந்த நபரை சென்னை புளியந்தோப்பு போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சுண்ணாம்பு பாறையை ஒட்டி உள்ள ஓடையில் நேற்றுமுன்தினம் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக கருவேப் பிலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் கருவேப்பிலங்குறிச்சி போலீ ஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் பார்த்தபோது ஓடையில் 3 சூட்கேஸ்கள் கிடந்தன. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. திட்டக்குடி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சூட்கேஸ் களை மீட்டனர். அந்த சூட்கேஸ்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அப்பகுதியில் சிவப்பு நிற செல்போன் ஒன்றையும் போலீ ஸார் கண்டெடுத்தனர். துண்டு துண்டான உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூட்கேஸில் அடைத்து கொல்லப்பட்டவர் யார், அவரை கொலை செய்து வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

சூட்கேஸில் கிடைத்த தடயங்களின் அடிப் படையில் போலீஸார், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விடுதியிலிருந்து 4 தினங்களுக்கு முன் ஒருவர் 3 சூட்கேஸ்களுடன் வெளியேறியது தெரியவந்தது. அவரது பெயர் வேல்முருகன் என்பதும் சென்னை அம்பத்தூரில் வசிப்பவர் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அம்பத்தூர் சென்று வேல்முருகனின் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அங்கு அவரது தந்தை கோவிந் தனிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை யானவர் சென்னை புளியந் தோப்பைச் சேர்ந்த வெங்கட்ராவ் எனவும், ஏடிஎம் காவலாளியாக வேலைபார்த்து வந்ததாகவும், தனது தந்தை மூலம் வெங்கட் ராவுடன் பழக்கம் ஏற்பட்டதை யடுத்து, வெங்கட்ராவ் தனக்கு வேறு இடத்தில் வேலைவாங்கித் தருமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. வேறு இடத்தில் வேலை வாங்கித் தர பணம் செலவாகும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதையடுத்து வெங்கட்ராவும், வேல்முருகன் கேட்ட தொகையை தர முன்வந்துள்ளார்.

இதையடுத்து வேல்முருகன் ஆலோசனையின் பேரில், சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு வெங்கட்ராவ் வந்துள்ளார். அங்கு அறைக்கு அழைத்துச் சென்று ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டு அவரை கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கட்ராவின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி 3 சூட்கேஸ்களில் அடைத்து வெளியே எடுத்துவந்து அங்கிருந்து காரில் தனது சொந்த ஊரான விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த பாசிக்குளம் அருகேவுள்ள சுண்ணாம்புப் பாறையை ஒட்டிய ஓடையில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே கடந்த 4 தினங்களுக்கு முன் வெங்கட் ராவைக் காணவில்லை என அவரது பெற்றோர் புளியந் தோப்புக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

விருத்தாசலத்தை அடுத்த பாசிக்குளம் அருகே சுண்ணாம்புப் பாறையில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். சிறுவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, ஓடையில் சூட்கேஸ் கிடப்பதைக் கண்டு, ஓடையில் இறங்கி சூட்கேஸை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது சூட்கேஸ் பக்கவாட்டில் ஒரு செல்போன் இருந்துள்ளது.

செல்போனை எடுத்துக்கொண்டு சூட்கேஸை திறக்க முற்பட்டபோது, துர்நாற்றம் வீசியதும், அதைவிட்டு, வெளியேறிய சிறுவர்கள் செல்போனையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவந்து ஊருக்குள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னரே சம்பவம் மற்றவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.

பின்னர் போலீஸார் செல்போன் உதவியுடன்தான் வெங்கட்ராவின் பெற்றோரை தொடர்புகொண்டு, வாட்ஸ் ஆப் மூலம் வெங்கட்ராவின் புகைப்படத்தை அனுப்பச் செய்து, கொலையானவர் வெங்கட் ராவ்தான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் குறுகிய ஆழமான ஓடை அங்கிருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. நன்கு பரிச்சயமான வர்களுக்கு மட்டுமே அவ்விடம் தெரிய வாய்ப்புண்டு. அந்த வகையில் வேல் முருகனின் சொந்த ஊர் பாசிக்குளம் என்ப தால் கொலைசெய்துவிட்டு இந்த ஓடையில் வீசியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x