

தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.
மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையை தொடங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டத்தை வலுப்படுத்த சில திருத்தங்கள் செய்ய கட்சி முன்மொழியும், இச்சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும்.
ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு பாசன வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். கிருஷ்ணா-கோதாவரி, பாலாறு-வைகை நதியை இணைக்கும் திட்டத்துக்கு ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும். வேளாண் விளைநிலங்களைப் பாதுகாக்க நிலப் பயன்பாடு சட்டம் கொண்டு வர வேண்டும். இயற்கை வேளாண்மை வழிமுறைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி பூச்சி மருந்துகள் பயன்பாட்டை ஊக்குவித்து மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைவருக்கும் தாய்மொழி கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை உறுதிப்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு, சுகாதாரம், மின்சாரம், வருவாய், கல்வி, காவல் ஆகிய துறைகளில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் தொடங்கி நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.