

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித் துள்ள நிலையில், அரசு பஸ்கள் இன்று (திங்கள்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் டிசம்பர் 19 அன்றோ அல்லது அதற்கு பிறகோ வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நோட்டீஸ் அளித்தன.
இதைத்தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை கைவிடக்கோரி, தனித் துணை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே கடந்த 26, 27-ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடந்தது.
26-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே சென்னை பல்லவன் இல்லம் முன்பு வாயிற்கூட்டம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தி பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தினர். ஆனால், தொழிலாளர்கள் நலன் கருதி வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று தொழிலாளர் நலன் காக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில்உறுதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே தொமுச பேரவை, தன்னிச்சையாக சில தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.
இதனால், தொழிலாளர் நலன் கருதி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சி களையும் தொமுச பேரவையைச் சேர்ந்தவர்கள் வீணடித்துவிட்டதுடன், போக்குவரத்துக்கழக தொழிலாளர் களுக்கு 1.9.2013 முதல் ஏற்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந் தத்தை தடுத்துள்ளனர். 29-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து விட்டு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அதிகாலை முதல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்கள் இயக்கப் படுவதை தடுத்தும், பணிக்கு வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை தாக்கியும் பஸ்களுக்கு சேதம் விளைவித்தும் வருகின்றனர்.
சட்டவிரோதமாகவும் விதிமுறை களுக்கு முரணாகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தொமுச தொழிற்சங்கத்தினர் நடந்து கொண்டாலும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் நாளை (இன்று) வழக்கம்போல இயங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.