

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் எம்ஜிஆர், கருணாநிதி பெயரை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரசின் சார்பில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார்.
தீர்மானத்தில் கூறப்பட்டிருப் பதாவது:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலம் முல்லை பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன. மத்திய நீர்வளக் குழுமத் தலைவரின் பரிந்துரைப்படி, நீர்மட்டம் குறைக் கப்பட்டு, அணை வலுப்படுத்தப் பட்டது. முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006 பிப்ரவரி 27-ல் தீர்ப்பளித்தது.
மேலும் மத்திய நீர்வளக் குழுமம் திருப்தியாகும் வகையில், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகு வல்லுநர்கள் அணையை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு அணையின் நீர்மட்டத்தை அதன் முழு அளவான 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் நீர்மட்டத்தை 136 அடி என நிர்ணயித்து, கேரள சட்டப்பேரவை யில் பாசன மற்றும் நீர் பாதுகாப்புத் திருத்த சட்டம் - 2006 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 2006 மார்ச் 18-ல் நடைமுறைக்கு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு, கடந்த மே 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. கேரள அரசின் பாசன மற்றும் நீர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2006, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதை மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பி னர்கள் மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கான ஆணையை கடந்த ஜூலை1-ல் மத்திய அரசு வெளியிட்டது.
கடந்த நவம்பர் 21-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது தமிழக மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்குக் காரணமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் சட்டப்பேரவை நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பேபி அணையை வலுப்படுத்தவும் எஞ்சிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு, தகுந்த அறிவுரை களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்தன.
திமுக சட்டப்பேரவை கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ‘‘இந்தத் தீர்மானத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரது பெயரை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இதை, அதிமுக பொதுக்குழுவின் புகழாரத் தீர்மானமாகத்தான் கருதி எதிர்க்க வேண்டி இருக்கும்’ என்றார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:
பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எழுந்து, பேரவை கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்று கூறி பேச முயன்றனர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. அலுவல் ஆய்வுக்குழு முடிவை திரும்பப் பெற முடியாது என பேரவைத் தலைவர் கூறினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், அவையில் சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.
பேச அனுமதி கிடைக்காததை அடுத்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.