

நாகப்பட்டினம் மாவட்டம் வைத் தீஸ்வரன்கோவிலில் உள்ள அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி தேவஸ்தானத்துக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி தேவஸ்தான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடப்பதால் அந்த நிர்வாகத்தை கவனிப்பதற்கு ஒரு நிர்வாக அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு தேவஸ்தான பரம்பரை அறங்காவலருக்கு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனை எதிர்த்து தேவஸ்தானத் தின் பரம்பரை அறங்காவலரான தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சன்னிதானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ‘‘ஒரு தேவஸ் தான நிர்வாகத்தை கவனிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒரு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முன்பே அதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். ஆனால், அது போன்ற விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படாத சூழலில் எங்களது நிர்வாகத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு நிர்வாக அதி காரியை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்ட நடவடிக்கை சட்ட விரோதமானது. எனவே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி எஸ்.நாக முத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது இது தொடர்பான விதி முறைகள் விரைவில் வகுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஒரு தேவஸ்தான நிர் வாகத்தில் உள்ள ஆலயத்துக்கு நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கு விதிமுறைகள் எதுவும் உரு வாக்கப்படாத சூழலில் நிர்வாக அதிகாரியை நியமிக்க மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செல்லாது. எனினும் அதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அந்த விதிமுறைகள் ஏற்புடையதாக இருப்பின் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.