

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 3 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியுள்ளார்.
மாநில முழுவதும் 1,95,90,377 ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளுக்கு வரும் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி கடந்த திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது.
இப் பணி தொடங்கப்பட்ட 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 3 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 18 ஆயிரம் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் 1.06 கோடி உள்தாள்கள் தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”தமிழகத்தில் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி முதற்கட்டமாக அனைத்து முழு நேர கடைகளில் நடைபெற்று வருகிறது. இந்த உள்தாள் ஒட்டும் பணி வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தங்களால் இயலும் நாட்களில் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம்'' என்றார்.