Published : 08 Dec 2014 09:55 AM
Last Updated : 08 Dec 2014 09:55 AM

மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்: முதல்வர்களிடம் நரேந்திர மோடி உறுதி

மாநில அரசுகளுக்கு கூடுதல் முக்கியத் துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

டெல்லியில் நேற்று நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்படும் புதிய அமைப்பு ‘டீம் இந்தியா’ என்ற கொள்கையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். டீம் இந்தியா என்பது பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகிய மூன்று தரப்பினரையும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் உள்ளடக்கியதாகும்.

மாநிலங்கள் முன்னேற்றம் காணாத வரை ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. கூட்டாட்சி தத்துவத்தை பலப்படுத்தும் வகையில், புதிதாக உருவாக்கப்பட உள்ள மாற்று திட்டக் குழுவில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வகை செய்ய வேண்டும்.

தங்களுடைய கருத்துகளை அல்லது மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினை களை தெரிவிப்பதற்கு தேவையான தளம் எதுவுமே இல்லை என மாநில அரசுகள் அவ்வப்போது கவலை அடைவதுண்டு. எனவே, இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கப்பூர்வ வழிமுறைகள் புதிய அமைப்பில் இடம்பெற வேண்டும்.

நாட்டின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திட்டக் குழு இல்லை என்றும் இப்போதைய நிலவரத்துக்கு அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் திட்டக் குழுவில் நீண்ட காலமாக அங்கம் வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

திட்டக் குழுவின் பங்கு, முக்கியத்துவம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 1992-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறையாக திட்டக் குழு குறித்து தன்னிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு கடந்த 2012-ம் ஆண்டிலும் திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கலந்தாய்வுக் குழு வலியுறுத்தியது.

நாட்டை பலப்படுத்தவும், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரம் வழங்கவும், அனைத்து பொருளாதார நடவடிக்கை களுக்கும் (தனியார் துறை) முக்கியத் துவம் தரவும் புதிய அமைப்பை உருவாக்க லாமா என்பது பற்றி மாநில முதல் வர்கள்தான் ஆலோசனை கூறவேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மோடி பேசும்போது, “இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.மாநில முதல்வர்கள் தங்களது ஆலோசனையை வழங்கி உள்ளனர். புதிய அமைப்பை வடிவமைப்பதற்கு இந்தக் கருத்துகள் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x