

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்தில் கிரானைட் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. அப்போது, துரைதயாநிதி வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி துரை தயாநிதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மோகன்குமார், தீபக் ஆகியோர் வாதிட்டனர்.
விசாரணைக்குப்பின், துரை தயாநிதியின் வெளிநாட்டு பயண விவரத்தை முன்கூட்டியே மேலூர் நீதிமன்றத்துக்கு தெரி விக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. தேவைப்படும் போது மனுதாரர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.