Last Updated : 25 Dec, 2014 10:04 AM

 

Published : 25 Dec 2014 10:04 AM
Last Updated : 25 Dec 2014 10:04 AM

அசாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல், வன்முறையில் உயிரிழப்பு 75 ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறையில் இறந்தவர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் நேற்று பரவலான போராட்டங்களுக்கு மத்தியில் மத்தியப் படையினர் 5 ஆயிரம் பேர் அங்கு விரைந்துள்ளனர்.

அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.

இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாது காப்பு படையினர் தீவிரப்படுத்தி யுள்ளது என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் அசாமின் சோனித் பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் இந்த அமைப்பினர் ஆதிவாசி யினர் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனித்பூர் மாவட்டம் மைட்டாலு பஸ்தி, ஜங்கி பஸ்தி ஆகிய கிராமத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டம் சாந்திபூர், பக்ரிகுரி ஆகிய கிராமத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். மேலும் சிராங் மாவட்டம் கல்மாந்திர் பகுதியில் 3 பேர் இறந்தனர். இது தவிர சம்பவ இடங்களில் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் பெண்கள், 18 பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அசாம் அரசின் வேண்டுகோளை ஏற்று துணை ராணுவப் படையினர் 5 ஆயிரம் பேரை அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசுக்கு ரூ.86 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உரிய சாலை வசதியில்லாத, இந்த தொலைதூர கிராமங்களில் தீவிரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தீவைப்பு

இதனிடையே இந்தத் தாக்குத லால் ஆத்திரமுற்ற ஆதிவாசி மக்கள், சோனித்பூர் மாவட்டத்தின் புலோகுரின் பகுதியில் போடோ இனத்தவர்களுக்கு சொந்தமான 20 வீடுகளுக்கு தீவைத்தனர். மேலும் வில், அம்பு ஏந்தி ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டப் பேரணிகள் நடத்தினர். இந்நிலையில் தீவைப்பு சம்பவங் களை தொடர்ந்து போடோ மற்றும் ஆதிவாசியின மக்கள் ஆயிரக் கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம் களில் தஞ்சமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

சோனித்பூர் மாவட்டம், தெகியாஜுலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து வில், அம்புடன் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் தெகியாஜுலி காவல் நிலையத்தை தாக்க முயன்றனர். இவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். தொடர்ந்து அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

அசாம் முதல்வர் தருண் கோகோய் தனது அமைச்சர்கள் 5 பேரை சம்பந்தப்பட்ட மாவட்டங் களுக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வுசெய்ய உத்தர விட்டுள்ளார்.

தருண் கோகோய் கூறும் போது, “மிகவும் காட்டுமிராண்டித் தனமான, கொடூர குற்றத்தை என்.டி.எப்.பி.(எஸ்) செய்துள்ளது. இதை நாங்கள் உறுதியுடன் எதிர்கொள்வோம். பிரதமரும், உள் துறை அமைச்சரும் தேவையான அனைத்து உதவிகளும் அளிப்ப தாக கூறியுள்ளனர். மத்திய அரசோ, மாநில அரசோ தீவிரவாதிகளிடம் அடிபணியப்போவதில்லை.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே அசாம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய நேற்று மாலை அசாம் புறப்பட்டனர்.

சோனியா, ராகுல் கண்டனம்

அசாமில் போடோ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“சோனித்பூரிலும் கோக்ரஜாரி லும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. இதை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்று சோனியா கூறியுள்ளார்.

மிருகத்தனமான இந்த கொலையை கண்டிப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நமது சமூகத்தில் வன் முறைக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x