Last Updated : 03 Dec, 2014 10:50 AM

 

Published : 03 Dec 2014 10:50 AM
Last Updated : 03 Dec 2014 10:50 AM

ரூ.2700 கோடி சொத்துகளை விற்க சஹாராவுக்கு அனுமதி

சஹாரா நிறுவனத்தின் ரூ.2700 கோடி மதிப்புள்ள நான்கு சொத்து களை விற்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

சஹாரா குழுமத்தில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டோர் ரூ.24 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளனர். இந்தத் தொகையை சஹாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ் வழக்கில் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் கடந்த மார்ச் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனது உடல்நிலையை கருத்திற்கொண்டு ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ரூ.5 ஆயிரம் கோடியை ரொக்கமாகவும் மீதமுள்ள ரூ.5000 கோடியை வங்கி உத்திரவாதமாகவும் அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தத் தொகையை திரட்ட சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டில் உள்ள 4 சொத்துகளை விற்பது தொடர்பாக நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஏ.ஆர்.தேவே, ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சஹாரா குழுமத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதிகள், உள்நாட்டில் உள்ள அதன் 4 சொத்துகளை விற்க அனுமதி அளித்தனர்.

இந்த சொத்துகள் ஜோத்பூர், புணே, குர்காவ்னில் உள்ள சவுமா, மும்பையில் உள்ள வசாய் ஆகிய நகரங்களில் உள்ளன. 4 சொத்துகளின் பரிவர்த்தனைகளும் கடந்த ஜூன் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உட்பட்டு இருப்பதால் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து விற்பனை தொடர்பான பேர ஏற்பாடுகள் மே 2015-க்குள் முடியும். அதற்குள்ளாக சொத்து களை வாங்குபவர்கள் அளிக்கும் பின்தேதியிட்ட காசோலைகளை செபி-சஹாரா ரீபண்ட் கணக்கில் தவணை தேதிக்குள் செலுத்திவிடுவோம் என்று சஹாரா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது.

நான்கு சொத்துகளையும் விற்பதன் மூலம் சஹாரா குழுமத்துக்கு ரூ.2700 கோடி வரை கிடைக்கும். இவை தவிர மேலும் சில சொத்துகளை விற்று சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க அந்த குழுமம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x