Published : 22 Dec 2014 09:02 AM
Last Updated : 22 Dec 2014 09:02 AM

தவணை விடுப்பு காலத்தில் கல்விக் கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது: அதிமுக எம்.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில் அருண் ஜேட்லி விளக்கம்

படிக்கும் காலத்திலோ தவணை விடுப்பு காலத்திலோ மாணவர்களிடம் கல்விக் கடனுக்கான வட்டியை வசூலிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், விதி 377-ன் கீழ் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ‘கல்விக் கடன் வழங்கும் வங்கிகள், படிக்கின்ற காலத்திலும் படிப்பு முடிந்து ஒரு வருட காலத்துக்கான தவணை விடுப்பு காலத்திலும் மாணவர் களிடம் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கோரி நெருக் கடி கொடுக்கின்றன. இதனால், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதைத் தவிர்த்து, அவர்கள் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் வங்கிகளுக்கு உத்தரவிட வேண் டும்’ என்று அவர் கேட்டிருந்தார்.

இதுதொடர்பாக விஜயகு மாருக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் வட்டி மானியம் வழங்க, இந்திய வங்கிகள் சங்கம் அனைத்து வங்கிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. கல்விக் கடன் பற்றிய புகார்களை கட்டண மில்லா தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம். இந்த தொலை பேசி எண்களை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி எழுதி வைக்க வேண்டும்.

மேலும், தவணை விடுப்பு காலத்தில் மாணவர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்தக் கால கட்டத்தில் தனியாக வட்டி கணக் கிட்டு, அரசிடமிருந்து மானியம் வந்ததும் அதற்காக வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே இந்திய வங்கிகள் சங்கம் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து வங்கிகள் முன்னணி ஊடகங்களில் விளம்பரம் செய்து மாணவர்களிடம் போதிய விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்விக் கடன் வழங்கும் திட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி, இந்த ஆண்டுக்கான கல்விக் கடன் மானியமாக கடந்த செப்டம்பர் 14-ம் தேதி வரை ரூ.1540.77 கோடியை மத்திய அரசிடம் கோரியிருக்கிறது. இதில் ரூ.729.18 கோடியை மட்டுமே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கி இருக்கிறது. எஞ்சிய மானியத்தையும் அமைச்சகம் வங்கிகளுக்கு முன் தேதியிட்டு வழங்கும்.

இவ்வாறு அந்த பதிலில் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கல்விக் கடன் குளறுபடிகள் தொடர்பாக விசா ரணை நடத்த தன்னாட்சி பெற்ற விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது ‘கல்விக் கடன் சேவை அமைப்பு’ (ELTF).

அதன் அமைப்பாளர் சீனிவாசன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தவணை விடுப்பு காலத்தில் கல்விக் கடனுக்கான வட்டியை நூற்றுக்கு நூறு சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், வங்கிகள் அந்த மானியத்தின் பயனை மாணவர்களுக்கு வழங்கு வதில்லை. இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத் தில் குரலெழுப்பி வருகிறோம்.

ரிசர்வ் வங்கியும் இந்திய வங்கிகள் சங்கமும் கொடுத்த உண்மைக்கு மாறான தகவல்களின் அடிப்படையில் நிதியமைச்சர் விஜயகுமாருக்கு அமைச்சர் பதில் கொடுத்திருக்கிறார். அமைச்சர் சொல்லி இருக்கும் எதையுமே வங்கிகள் கடைபிடிக்கவில்லை.

எனவே, தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்பைக் கொண்டு கல்விக் கடன் குளறுபடிகளை விசாரித்து வங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

138 நாட்களுக்குப் பிறகு பதில்

மக்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் கேள்வி எழுப்பியது கடந்த ஜூலை 30-ம் தேதி. அதற்கு சம்பந்தப் பட்ட நிதியமைச்சகம் பதில் அளித்திருப்பது டிசம்பர் 15-ம் தேதி. ஒரு கேள்விக்கு பதிலளிக்க 138 நாட்கள் ஆகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x