

எய்ட்ஸ் குறித்து பேசுவதற்கு பொதுமக்கள் முன்வந்துள்ளதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்துள்ளதற்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
காஞ்சிபுரத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், மாவட்ட ஆட்சியர் சண்முகம் பேசியதாவது: பழங்கால தமிழ் இலக்கியத்தில் எய்ட்ஸ் நோய் கிருமி என குறிப்பிடப்பட்டுள்ளது. பயம் கலந்த மன இறுக்கத்துடன் உள்ள நபர் களே தவறான பாதையில் சென்று இத்தகைய நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அதனால், மனிதன் மற்றவர்களிடத்தில் அன்புடனும் அரவணைப்புடனும் பழக வேண்டும் என்றார்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணராஜ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் குமாரசாமி, மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வட்டாரங்கள் கூறிய தாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2012-13ம் ஆண்டு எய்ட்ஸ் பாதிப்பு 1.8 சதவீதமாக இருந்தது. இதுவே 2013-14ம் ஆண்டில் 0.94 சதவீதமாக குறைந்துள்ளது. எய்ட்ஸ் குறித்த தனிநபர் விழிப்புணர்வும், இதுகுறித்து பொதுமக்கள் சாதாரணமாக பேச முன்வந்துள்ளதுமே எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைவதற்கான அடிப்படைக் காரணம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.