

பாலாறு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட வீரப்பன் கூட்டாளி ஞானப்பிரகாசத்துக்கு 21 ஆண்டுக்குப் பின், நேற்று தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, மைசூர் சிறை நிர்வாகம் பரோல் அனுமதி வழங்கியது.
தமிழக, கர்நாடக எல்லை பாலாற்றில் கடந்த 93-ல் வீரப்பனைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையினர் சென்றபோது, அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை உள்ளிட்ட 21 பேர் கண்ணிவெடியில் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன், மீசை மாதையன், பிளவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 93-ம் ஆண்டு ஞானப்பிரகாசத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையில் 2002-ம் ஆண்டு பாலாறு குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டன விதிக்கப்பட்டது. ஞானப்பிரகாசம் கடந்த 1993 முதல் தற்போது வரை 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசத்தின் தந்தை ஜோசப் இறந்ததை முன்னிட்டு, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஞானப்பிரகாசத்தின் உறவினர்கள், சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர்.
நேற்று சிறை நிர்வாகம் பகல் 2.30-3.00 மணி வரை, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதித்து, பாதுகாப்புடன் பரோலில் அனுப்பி வைத்தது. ஞானப்பிரகாசம் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், போலீஸார் மீண்டும் மைசூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.