Published : 12 Dec 2014 09:04 AM
Last Updated : 12 Dec 2014 09:04 AM

புதிதாய்ப் பிறந்த `நியூ’சிலாந்து 4

உலகத்திலேயே நான்தான் முதலாவது’’ என்று ஒரு விதத்தில் நியூசிலாந்து பெருமைப்பட்டுக் கொண்டால் அது நியாயம்தான். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு அதுதான்.

உலகின் அத்தனை நாடுகளிலும் ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலைதான் இருந்தது. ஜனநாயகத் தொட்டில் என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ் நகரில் கூட இதே நிலைதான். மகளிர் வாக்குரிமையை ஆங்கிலத்தில் Women's suffrage என்பார்கள். மகளிருக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. அந்தக் காரணங்களில் முக்கியமாகக் கூறப்பட்டவை இவை.

அரசு என்றால் ஓர் ஆக்ரோஷம் வேண்டும். பிடிவாதமான உறுதி வேண்டும். இளகிய மனமெல்லாம் அரசை நடத்த சரிப்பட்டு வராது.

பாராளுமன்றம் என்றால் ராணுவம் தொடர்பான முடிவுகளையெல்லாம் எடுக்க வேண்டியிருக்கும். பெண்களால் இதெல்லாம் முடியுமா என்ன?

தவிர இயல்பாகவே பெண்களுக்கு வாக்களிக்கும் ஆசையெல்லாம் கிடையாது.

ராணுவத்தில் சேர வேண்டுமென்றால் பெண்கள் முன்வருவார்களா? அப்படியிருக்க வாக்களிப்பதில் மட்டும் ஏன் சமத்துவம்?

ஒரு பெண் நாட்டின் தலைமையேற்றால் அந்த நாட்டைப்பற்றிய இமேஜ் என்னாவது? அத்தனை நாடுகளின் ஏளனப் பார்வைக்கும் இலக்காக வேண்டுமா?

குடும்ப அமைப்பு நாசமாகிவிடும். சமூகம் சீர்கெட்டுவிடும்.

இப்படி எதையெதையோ வஞ்சகமாகவோ, அறியாமையினாலோ கூறி வாக்களிக்கும் உரிமை மகளிருக்கு மறுக்கப்பட்டு வந்தது. வேடிக்கை என்னவென்றால் பெண்களும் நெடுங்காலத்துக்கு இதற்கெதிராகக் குரல் எழுப்பவில்லை. மகளிர் வாக்குரிமைக்கான இயக்கம் முதலில் 1780களில் பிரான்சில் துவங்கியது. பிறகு ஸ்வீடனில் அது பரவியது. 1756-ல் அமெரிக்காவின் ஒரு சின்ன பகுதியான மாஸசூட்ஸில் மட்டும் இது அமலுக்கு வந்தது. (உள்ளூர் முனிசிபாலிடி தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை). பிறகு நியூ ஜெர்ஸியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் ஒரு பெண் திருமணமாகாதவளாகவும், தன் பெயரில் சொத்துக்கள் கொண்டவளாகவும் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற விநோத நிபந்தனையும் அதில் கலந்திருந்தது. இந்த நிலையில் பெண்களுக்கு நாடு தழுவிய வாக்குரிமை அளிக்க நியூசிலாந்து முன்வந்தது. 1893 செப்டம்பர் 19 உலக மகளிர் திருப்புமுனைகளில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் மகளிருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்.

வாக்களித்தது மட்டுமல்ல, ஒரு பெண்மணி தேர்தலில் வேட்பாளராகவே நின்றார். மேயர் பதவிக்குப் போட்டியிட்ட அந்தப் பெண்மணியின் பெயர் எலிசபத் ஏக்ஸ். மற்ற நாடுகளுகளைவிட நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் நீண்ட வருடங்களாகவே (1887லிருந்தே) பிரச்சாரம் செய்யப்பட்டது. பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக 1893-ல் இது சட்டமானது. அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்டில் அளிக்கப்பட்ட ஒரு மனு (1893 Petition).

கேட் ஷெப்பர்டு (KATE SHEPPARD) என்ற பெண்மணிக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. கேட் நன்கு படித்தவர். தன் அப்பாவைப் போலவே இசை ஆர்வம் மிக்கவர். தந்தை இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மகளுடன் கிரிஸ்ட்சர்ச் நகருக்கு குடிபெயர்ந்தார் அவர் அம்மா. கேட் கிறிஸ்தவ மதத்தில் தீவிரப் பற்று கொண்டவராக வளர்ந்தார். நாளடைவில் வால்டர் ஷெப்பர்டு என்பவரை கேட் மணந்து கொண்டார். தங்கள் மகனுக்கு டக்லஸ் என்று பெயரிட்டனர்.

மகளிரை இரண்டாம் தரக் குடிமக்களாக உலக நாடுகள் நடத்துவது கேட்டுக்குப் பிடிக்கவில்லை. “மனிதர்களைப் பிரிக்கும் எதுவாக இருந்தாலும் - அது இனம், வகுப்பு, பாலினம் என்ற எதுவாக இருந்தாலும் - வெற்றி காணப்பட வேண்டும்'' என்று மேடைகளில் முழங்கினார். அடுத்தடுத்து பெண்களின் வாக்குரிமைக்காக அரசிடம் மனுக்களைக் கொடுத்தார்.

பெண்களின் உலகம் என்பது குடும்பம்தான் என்று வாதிட்டனர் எதிர்க்கட்சியினர். `அதனால் என்ன? பெண்களுக்கு வாக்குரிமை அளித்தால் குடும்பங்களைப் பாதுகாக்கும் பல கொள்கைகளை அவர்கள் ஆதரித்து அறிமுகப்படுத்த வாய்ப்பு உண்டே' என்றார் கேட்.

முதலில் மேல்சபையில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. ஆதரவாக 20 வாக்குகள். எதிராக 18 வாக்குகள். கீழ் சபையில் ஏற்கனவே அறுதியிட்ட மெஜாரிட்டியில் மகளிருக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.

பெண்களுக்காக வாக்குரிமை அளிக்கப்பட்டவுடன் கேட், அப்பாடா என்று ஓய்வெடுக்க முடியவில்லை. காரணம் அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல். “பெண்களே, உடனே உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுங்கள்'' என்று முழங்கினார். பெண் வாக்காளர்களில் மூன்றில் இருவர் என்கிற விகிதத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

தேர்தலுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று அங்கும் மகளிர் வாக்குரிமை குறித்து பேச்சுகள் நிகழ்த்தினார். அங்கும் இந்த ஆர்வம் பரவத் தொடங்கியது. மீண்டும் நியூசிலாந்து திரும்பிய போது அங்கு புதிதாக உருவாகியிருந்த மகளிர் தேசியக் குழுவின் தலைமைப் பதவி இவரைத் தேடி வந்தது. எனினும் சில வருடங்களிலேயே உடல்நிலை காரணமாக அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். என்றபோதிலும் தன் எழுத்து மூலமாக மகளிர் உரிமையைத் தேடலைத் தொடர்ந்தார்.

நியூசிலாந்து சரித்திரத்தில் மட்டுமல்ல மகளிர் முன்னேற்றச் சரித்திரத்திலும் கேட் ஷெப்பர்டு முக்கியமானவர். இவரது உருவம் நியூசிலாந்தின் 10 டாலர் நோட்டில் இடம் பெற்றது.

2006ல் மகளிர் சரித்திரத்தில் மற்றொரு சரித்திரம் படைத்தது நியூசிலாந்து. ஏற்கனவே அந்த நாட்டில் தலைவியாக அரசி இருக்க, நியூசிலாந்தின் பிரதமர், கவர்னர் ஜெனரல், சபாநாயகர், முக்கிய நீதிபதி என்று அத்தனை உயர் பதவிகளிலும் பெண்கள்!

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x