

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் மத்திய பாஜக அரசு ஆர்வமாக இருப்ப தாக முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த நாள் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதில் காங்கிரஸில் பல கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையிலும், மும்மொழி கொள்கைதான் நாட்டின் நலனுக்கு தேவையானது என்று காங்கிரஸ் அரசு அதையே கடைபிடித்தது. ஆனால், பாஜக அரசு தற்போது சமஸ்கிருத மொழியை திணிக்க முயல்கிறது. பள்ளிகளில் மூன்றா வது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்கிற பாஜகவின் முடிவை காங்கிரஸ் கட்சி கடுமை யாக எதிர்க்கிறது. இதுதொடர்பாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போதுகூட பொதுத் துறையை தனியாரிடம் கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நஷ்டத்தில் இயங்கி வந்தாலும்கூட அதற்கு மானியம் கொடுத்து இயக்கி வந்தோம்.
பாஜக அரசு ஆர்வம்
இதன்மூலம் ஓ.என்.ஜி.சி., பெல், கோல் இந்தியா போன்ற நிறுவனங் கள் லாபம் ஈட்டி வருகின்றன. ஆனால், பாஜக அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்குவதில் ஆவலுடன் உள்ளது.
குவாஹட்டியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்குவோம்’ என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் நேரத்தில், அரசின் கொள்கை முடிவை வெளியில் கூறுவது தவறானது. இதுதொடர் பாக எங்கள் உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.