பெண் காவலர்களின் வேலை பாதுகாப்பானதாக உள்ளதா?

பெண் காவலர்களின் வேலை பாதுகாப்பானதாக உள்ளதா?
Updated on
2 min read

அந்த பெண் காவலர் கருவுற்றிருந்தார் என்பது மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. பல மணி நேரம் நின்றுகொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காகவும், கருவை பாதுகாத்து வளர்க்கவும் விடுமுறை கேட்டபோது அதிகாரிகள் மறுத்துள்ளனர். நிலைமை மோசமடைந்து இறுதியில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.

இதுபோன்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள் கடைநிலை பெண் காவலர்கள்தான். இந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் அதிக நேரம் நின்றுகொண்டு செய்யும் பாதுகாப்பு பணிதான் வழங்கப்படுகிறது. தமிழக காவல் துறை மற்றும் ஆயுதப் படை பிரிவுகளில் மாநிலம் முழுவதும் 17 ஆயிரம் பெண் காவலர்கள் உள்ளனர்.

சென்னை நகரில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். போலீஸ் வேலைக்கு வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பணிகள் ஒரே மாதிரிதான். ஆனால் பல நேரம் சாலைகளில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிப்பது, தனித்துவமான நாட்களில் உள்ள சிரமங்கள் உள்ளிட்டவை பெரிய பிரச்சினையாகும். சாலைகளில் நிற்கும் பெண் காவலர்கள் ஹோட்டல்களிலோ அல்லது வீடுகளிலோதான் அனுமதி பெற்றே இயற்கை உபாதைகளை கழிக்க முடியும்.

பொதுவாக சாலை பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரமாவது சாலைகளில் நிற்கிறார்கள். இதுவே பண்டிகைக் காலம், முக்கிய கட்சிகளின் போராட்டம் போன்ற நாட்களில் வேலை நேரம் இன்னும் கூடுதலாகிவிடுகிறது. சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் சுமார் 18 மணி நேரம் வேலை செய்து இருக்கிறார்.

பணி முடிந்து வீடு சென்ற அடுத்த 2 மணி நேரத்தில் மீண்டும் பணிக்கு வர மேல் அதிகாரி உத்தரவிட்டதாக கூறுகிறார் அந்த பெண் காவலர். குறிப்பிடப்படாத வேலை நேரம் என்ற காரணத்தால் பல பெண் காவலர்களின் குழந்தைகள் அவர்களுடைய அம்மாவிடமோ, மாமியாரிடமோதான் வளர்கின்றன.

“எனக்கு குழந்தை பிறந்தபோது மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுதான் நான் அவளுடன் இருந்த அதிகபட்ச நாட்கள். என்னுடைய மகளுக்கு இப்போ 2 வயசு ஆகிவிட்டது. இந்த வயதில் அவள் பேசும் மழலை பேச்சுக்காக தினமும் 10 தடவையாவது போன் மூலம் பேசுவேன்..” என செல்லும்போது கண் கலங்கிவிட்டார் அந்த கம்பீரமான உடை அணிந்த பெண் காவலர். போலீசாக வேண்டும் என்ற கனவுடன் வரும் இவர்கள் இலக்கில்லாமல் எறியப்படும் பந்து போல், மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டியுள்ளது.

சில நேரங்களில் மேல் அதிகாரிகள் கொச்சையான வார்த்தைகள் மற்றும் பாலியல் தொந்தரவுக்கும் ஆட்படுகின்றனர். பல மணி நேரம் நின்றுகொண்டே இருப்பதால் பெண் காவலர்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மருத்துவர்களிடம் இது குறித்து கூறும்போது, “பெண் காவலர் பணியில் உள்ளவர்களுக்கு தனித்து வமான நாட்களில் அதிக ரத்தப் போக்கு ஏற்படுகிறது.

இதனால் அவர்களின் கரு முட்டைகள் வலுவிழந்து ஆரம்ப கர்ப்ப காலங்களில் தானாகவே கரு கலைந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. உணவு முறை மாற்றம், சரியான நேரத்துக்கு இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் போவது எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்'' என்கின்றனர்.

“பெண் காவலர்களின் பணிச் சுமையை குறைக்க போதுமான காவலர்களை நியமித்து, காலிப் பணியிடங்களை நிரப்புவது அவசியமான ஒன்றாகும். அதேசமயம் சுழற்சி முறையில் 8 மணி நேர பணியை உத்தரவாதப்படுத்த வேண்டும். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு முறையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்.

குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மன உளைச்சல் குறித்த கவுன்சலிங் நடத்துவதோடு, மாதம் ஒரு முறை உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரமாவது சாலைகளில் நிற்கிறார்கள். இதுவே பண்டிகைக் காலம், கட்சிகளின் போராட்டம் போன்ற நாட்களில் வேலை நேரம் இன்னும் கூடுதலாகிவிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in