Published : 04 Dec 2014 10:44 AM
Last Updated : 04 Dec 2014 10:44 AM

நேரடி எரிவாயு மானியத் திட்ட குழப்பங்களை போக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சமையல் எரிவாயு மானியத்தை வங்கிகள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக நிலவும் குழப்பங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பிறகே இத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எரிவாயு மானியத்தை வங்கிகள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான திருத்தியமைக்கப்பட்ட நேரடி பயன் மாற்றத் திட்டம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் புதுச்சேரி உள்ளிட்ட 54 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சமையல் எரிவாயு மானியத்திற்கான நேரடி பயன் மாற்றத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்படும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சில நிதி உதவிகளை இத்திட்டத்தின் மூலம் வழங்குவது உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வுதவிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுபவை என்பதால் இத்திட்டங்களின் பயனாளிகள் வங்கிகளை அணுகி தங்களுக்கான நிதி உதவிகளை பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆனால், சமையல் எரிவாயு மானியத்தை வங்கி மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவது அவ்வளவு எளிதான பணி அல்ல; இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளன. இவர்கள் தவிர மேலும் 10 கோடி குடும்பங்களுக்கு இன்னும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டியிருக்கிறது.

இந்தக் குடும்பங்களுக்கும் எரிவாயு இணைப்பு வழங்குவதாக வைத்துக் கொண்டால், குறைந்தது 25 கோடி குடும்பங்கள் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கும். ஆனால், இந்தக் குடும்பங்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பது தான் சோகமான உண்மையாகும்.

பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின்படி 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதிக்குள் 7.5 கோடி புதிய வங்கிக்கணக்குகளைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போதிலும், அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஒருவேளை இந்த இலக்கு எட்டப்பட்டாலும், அதன்பிறகும் கூட எரிவாயு இணைப்பு பெற்று வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை சில கோடிகளாவது இருக்கும்.

அதுமட்டுமின்றி, புதிதாக தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளை சமையல் எரிவாயுக் கணக்குடன் இணைக்க கூடுதலாக 3 மாதங்கள் தேவைப்படும். இத்தகைய சூழலில் நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதென மத்திய அரசு எந்த அடிப்படையில் தீர்மானித்தது எனத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் வங்கி வசதி இல்லாத கிராமங்கள் ஏராளமாக உள்ளன. பல ஊர்களில் வங்கி சேவை பெறுவதற்காக 20 கி.மீ. வரை செல்ல வேண்டியுள்ளது. மேலும் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? என்பது குறித்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இத்திட்டம் குறித்த விவரங்கள் வங்கிகள் மற்றும் சமையல் எரிவாயு முகவர்களுக்கே தெரியவில்லை. இந்த குழப்பங்களைப் போக்கி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் நேரடி எரிவாயு மானியத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், அதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்களை விட பாதிப்புகளே அதிகமாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் மானியத்தை அடியோடு ரத்து செய்ததைப் போல சமையல் எரிவாயு மானியத்திற்கும் மத்திய அரசு ஓசையின்றி உச்சவரம்பு நிர்ணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஒரு கிலோவுக்கு ரூ.20 வீதம் ஓர் உருளைக்கு அதிகபட்சமாக ரூ.280 மட்டுமே மானியமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது. இது உண்மையாக இருந்தால் உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது அரசு தரும் மானியத்தைக் கொண்டு சமையல் எரிவாயு உருளையை வாங்க முடியாது.

கடந்த காலங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது. அவ்வாறு உயரும் பட்சத்தில், இப்போது எரிவாயுவுக்கு கொடுக்கும் விலை, மத்திய அரசு அளிக்கும் மானியம் ஆகியவற்றுடன் சேர்த்து கூடுதலாக ரூ.500 வரை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் ஏழைகள் எரிவாயுவை பயன்படுத்துவதை விடுத்து மீண்டும் விறகுகளை பயன்படுத்தத் தொடங்குவர்.

எனவே, சமையல் எரிவாயு மானியத்திற்கான நேரடி பயன் மாற்றத் திட்டம் போலிகளை களைவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மானியத்தை குறைக்க பயன்படுத்தப்படக் கூடாது. சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்தாலும் பொதுமக்கள் இப்போது செலுத்தும் கட்டணத்தை தவிர மீதமுள்ள தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, சிறப்பாக செயல்படுத்துவதற்குரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் வரை இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்; இத்திட்டம் தொடர்பாக நிலவும் குழப்பங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பிறகே இத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x