

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களைக் கடத்திக் கொன்ற கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூர் கீழமருதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனியப்பன் (40). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்த பழனியப்பன், கோவையில் கட்டுமான வேலை செய்து வந்துள்ளார்.
கோட்டூர் கீழமருதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் அமிர்தவள்ளி (25) என்ற மாற்றுத் திறனாளி பெண்ணுடன் பழனியப்பனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவையில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோட்டூர் வேதபுரம் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் அருகேயுள்ள வயலில் பழனியப்பன் சடலம் கிடந்தது நேற்று அதிகாலை தெரியவந்தது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில், குன்னியூர் அரிச்சந்திரா நதியில் அமிர்தவள்ளி சடலம் கிடந்தது.
இவர்கள் இருவரும், கைக் குழந்தையுடன் கோவையிலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பேருந்தில் வந்து, சொந்த ஊருக்கு நடந்து சென்றதா கவும், வழியில் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்தும், குழந்தையின் நிலை குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
கொலையான இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.