Published : 07 Dec 2014 06:57 PM
Last Updated : 07 Dec 2014 06:57 PM

100 நாள் வேலைத் திட்டத்தில் தவறுகளை களைய வேண்டும்: கருணாநிதி

100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் தவறுகளை எல்லாம் களைந்து முறையாக இந்தத் திட்டம் செயல்பட அனைத்து முயற்சிகளையும் எடுக்க முன்வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற மக்களுக்கு, ஆண்டுக்கு 100 நாள் வேலை தரும் நோக்கத்தோடு 2005ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

இந்த ஆண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் வேலை செய்த பலருக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அந்தத் தொழிலாளர்களுக்கு 8,908 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏராளமான பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த எட்டு மாதங்களாக, எந்தவிதமான வேலையும் தரப்படவில்லை. தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கு நாள் ஒன்றுக்கு 143 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் பல இடங்களில் 100 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் புகார்கள் உண்டு.

இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்ற, இந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வரை 10.6 கோடி குடும்பத்தினர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 8.3 கோடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. 2.3 கோடி குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 10.9 கோடி குடும்பத்தினர், விண்ணப்பம் செய்து அதில் 9.8 கோடி குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டது. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை மத்திய அரசு குறைத்ததே இதற்குக் காரணம். 2013-2014ஆம் நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 39 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டில், இந்த ஒதுக்கீடு 24 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு நிதி குறைக்கப்பட்டது பற்றி மாநிலங்களவையில் பல உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

நம்முடைய கழகத்தின் சார்பில், மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் கனிமொழி 28-11-2014 அன்று பேசும்போது, "முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின் ஆற்றலைக் குறைக்கும் வகையில் மாற்றங்கள் செய்வது கவலைக்குரியது. பெருமளவிலான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளை நம்பியே இருக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் பயன்பாட்டுப் பகுதியைக் குறைப்பது பெரும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நூறுநாள் திட்டத்தில், விவசாயப் பணிகளையும் இணைப்பது விவசாய வளர்ச்சிக்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் நீண்ட கால உதவியாக அமையும். கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டம் நாட்டில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் மறுபரிசீலனை செய்து மேலும் எவ்வாறு முன்னேற்றலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, இந்தத் திட்டத்தைக் குறைக்கின்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

எனவே மத்திய அரசு மக்களின் மனதைப் புரிந்து கொண்டு, இந்தத் திட்டத்தில் நடைபெறும் தவறுகளை எல்லாம் களைந்து முறையாக இந்தத் திட்டம் செயல்பட அனைத்து முயற்சிகளையும் எடுக்க முன் வர வேண்டும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x