Published : 01 Dec 2014 10:11 AM
Last Updated : 01 Dec 2014 10:11 AM

அமைதியான உலகம் உருவாக சைவ உணவுமுறையை பின்பற்ற வேண்டும்

அமைதியான உலகம் அமைய வேண்டுமென்றால் சைவ உணவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் கூறினார்.

சர்வதேச சைவ உணவாளர்கள் சங்கத்தின் 42-வது உலக சைவ உணவு திருவிழா என்னும் நிகழ்ச்சி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன் தினம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள சைவ உணவு பிரியர்கள் ஏராளமான அளவில் பங்கேற்றனர். சைவ உணவு வகைகள், தானியங்கள் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

சைவ உணவுத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் கூறுகையில்,“சைவ உணவு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் போராடி வருகிறேன்.

இது தொடர்பாக மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறேன். முரசொலி மாறன், மம்தா பானர்ஜி, போன்றவர்கள் அமைச்சராக இருந்தபோது இது தொடர்பாக அவர்களிடம் வலியுறுத்தி இருந்தேன். உலகில் பிரசித்தி பெற்ற தலைவர்களான பெர்னாட்ஷா, லியோ டால்ஸ்டாய், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டவர்கள் சைவ பிரியர்களாக இருந்தனர். சைவ உணவை உண்பவர்களின் மனதும் மூளையும் அமைதியுடனும் நிதானத்துடனும் செயல்படும். இந்த உலகம் அமைதியாக இருக்கவும், சமுதாயம் வளம்பெறவும், சைவ உணவுமுறையை பின்பற்ற வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல். சர்வதேச சைவ உணவாளர்கள் சங்கத் தலைவர் மர்லி வின்க்லர், மணிபால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.எம்.ஹெக்டே, திரைப்பட தயாரிப்பாளர் அழகப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x