

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தடையை மீறி நிறுத்தப்பட்ட 100 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் என தினமும் சுமார் 30 ஆயிரம் பேர் மருத்துவ மனைக்குள் வருகின்றனர்.
இவை தவிர டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை பணி யாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் சைக்கிள், பைக் மற்றும் கார் களுக்கு கட்டண நிறுத்தும் இடம் உள்ளது. அதன்படி சைக்கிளுக்கு ரூ.1-ம், பைக்குக்கு ரூ.5, காருக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோக்களுக்கு கட்டண நிறுத்தும் இடம் இல்லை. அதனால், நோயாளிகளை அழைத்து வரும் ஆட்டோக்கள் வழியிலேயே நிறுத்தப்படுவதால், ஆம்புலன்ஸ்கள் வருவதற்கும் போவதற்கும் முடியவில்லை என மருத்துவமனை நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து மருத்துவ மனை வளாகத்தில் ஆட்டோக் களை நிறுத்துவதற்கான தடையை கடந்த வாரம் நிர்வாகம் அமல்படுத்தியது. ஆட்டோக்கள் எங்காவது நிறுத்தப்பட்டால் உடனடியாக தகவல் தெரி விக் கும்படி மருந்தகம், புற நோயாளி கள் பிரிவு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக் கையை நிர்வாகம் அனுப்பியது. மருத்துவமனையில் ஆட்டோக் கள் நிறுத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்கப் பட்டது.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தடையை மீறி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திய 100 ஆட்டோக்களுக்கு ரூ.100, ரூ.150 என மருத்துவமனை அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை கட்டிய பிறகே, ஆட்டோவை நிர்வாகம் ஒப்படைத்தது.