

தகுதியுள்ள யாருக்கும் சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் (முதியோர் உதவித் தொகை) நிறுத்தப் படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை மீது நேற்று நடந்த விவாதத்தின்போது, 7 லட்சம் பேருக்கு முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூறினர். ஐ.பெரியசாமி (திமுக), சுபா (தேமுதிக), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), கதிரவன் (பார்வர்டு பிளாக்) ஆகியோர் சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இதற்கு பதிலளித்து வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் வெறும் 21 லட்சம் பேருக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப் பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 35 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் மாதம் 500 ரூபாய் என்று வழங்கியதை, இந்த ஆட்சியில் ரூ.1,000 ஆக உயர்த்தி, ஆண்டுக்கு ரூ.4,200 கோடி அளவுக்கு வழங்கி வருகிறோம்.
கடந்த திமுக ஆட்சியில் விதிமுறை களை மீறி, தகுதியற்ற மாட மாளிகை களில் இருப்போருக்கும் பொருளாதாரத் தில் வசதியானவர்களுக்கும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் ஓய்வூதியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் துறைரீதியான தணிக்கையில் பதில் சொல்ல வேண்டியுள்ளது என்பதால், தகுதியற்ற போலிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
அந்த அடிப்படையில், தகுதியற்ற சிலருக்கு ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் தகுதியான முதியோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள யாருக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை. தற்போது 35 லட்சம் பேருக்கு வழங்கும் நிலையில், இன்னும் தகுதியுள்ளவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் வழங்குவோம்.
ஐ.பெரியசாமி (திமுக):
என் தொகுதியில் தகுதியான பலருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்:
கடந்த திமுக ஆட்சியில் நல்ல பொருளாதார பின்னணி கொண்ட 35 வயது, 10 வயதுக்காரருக்கெல்லாம் ஓய்வூதியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி தொகுதியில் வசதி யுள்ள 16 ஆயிரம் பேருக்கு திமுக ஆட்சி யில் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள் ளது. அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி தகுதியுள்ளோ ருக்கு வழங்குகிறோம்.