உற்பத்தி சார்ந்த துறைகளில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும்: கேரள ஆளுநர் சதாசிவம் நம்பிக்கை

உற்பத்தி சார்ந்த துறைகளில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும்: கேரள ஆளுநர் சதாசிவம் நம்பிக்கை
Updated on
1 min read

உலக அளவில் உற்பத்தி சார்ந்த துறையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும் என கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் உற்பத்தி மற்றும் மேலாண்மை தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘‘ உலக நாடுகளில் 8 சதவீத உற்பத்தியுடன் 9-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. சுமார் 14 சதவீத உற்பத்தியுடன் சீனாவும், அமெரிக்காவும் முதல் இடத்தில் போட்டி போடுகின்றன. இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் வரும்போது ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாடுகளுடன் போட்டியிட முடியும்’’என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தி னராக கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘உற்பத்தி அல்லது சேவைத் துறைகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும் பாக திகழ்கின்றன. இந்த துறைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக கீழ்மட்ட அளவில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது.

வளரும் நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச சந்தையை ஒருங்கிணைத்து உற்பத்தித் துறையை வளப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் குறிப்பிட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் உற்பத்தி சார்ந்த துறையில் இந்தியாவுக்கு ஒரு தனிப்பட்ட இடம் இருக்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in