

தமிழகத்தில் பட்டு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளதால் சீனப்பட்டு இறக்குமதி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் பட்டுக்கூடுகளின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா 2-வது இடம்
நமது கலாச்சாரத்துடன் இணைந்த பாரம்பரியத்தின் அடையாளமாக பட்டு கருதப்படுகிறது. பட்டு உற்பத்தியில் இந்தியா உலகில் 2-வது இடத்தில் இருந்தாலும் நமது பட்டுத் தேவை, உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது. மீதமுள்ள பட்டுத் தேவையை இறக்குமதி செய்யப்படும் சீன பட்டுகள் பூர்த்தி செய்கின்றன.
இந்தியாவில் கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டு உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி உட்பட மாநிலம் முழுவதும் 23,759 விவசாயிகள் பட்டு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 38,936 ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் மல்பரி சாகுபடி செய்ய முடியாமல் பட்டு விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறினர். கடந்த 6 மாத காலமாக பரவலாக மழை பெய்ததால் பட்டு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் விற்பனை
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வெ.சச்சிதாநந்தம் `தி இந்து'விடம் கூறியது: இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை கூடுதலாக 6,282 ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3,651 விவசாயிகள் புதிதாக பட்டு உற்பத்தித் தொழிலுக்கு வந்துள்ளனர். கடந்த 8 மாதங்களில் 5,910.8 மெட்ரிக் டன் வெண் பட்டுக்கூடுகள் உற்பத்தி யாகியுள்ளன. இதில் இருந்து 917 மெட்ரிக் டன் கச்சா பட்டு உற்பத்தி யாகியுள்ளதால், தமிழகத்தில் ஒரே ஆண்டில் பட்டு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் பட்டு உற்பத்தி 64 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இளைய சமுதாயத்தினர் பட்டு வேஷ்டி, சட்டை, பட்டுச் சேலைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், திருமணம் மற்றும் விழாக் காலங்களில் மட்டுமே விற்பனையான பட்டுத் துணிகள், தற்போது ஆண்டு முழுவதும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன.
சீன இறக்குமதியும் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத் தில் பட்டுக் கூடுகளுக்கு தற்போது ஆண்டு முழுவதுமே வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பட்டுக் கூடின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கச்சாப் பட்டு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் பட்டுகளின் தேவை மற்றும் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
பழநியில் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையில் மல்பரி இலைகளை சாப்பிடும் பட்டுப்புழுக்கள்.
பட்டு இலையில் மல்பரி டீ அறிமுகம்
பட்டுப் புழுக்களுடைய வளர்ச்சிக்கு முக்கிய ஊட்டச்சத்து பொருளான மல்பரி இலைகள் உணவாக வழங்கப்படுகின்றன. இந்த மல்பரி இலைகளை கால்நடைகளுக்கு உணவாக வழங்கினால், பால் உற்பத்தி அதிகரிக்கும் என கால்நடை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர்.
தற்போது மல்பரி இலையில் இருந்து மல்பரி `டீ'யை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மல்பரி டீயை சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர். ஆனால் மல்பரி டீ இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது.
விரைவில் சந்தை விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. பட்டு உற்பத்தி மற்றும் மல்பரி `டீ' என மல்பரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இரட்டை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.