புதிய ஊதிய ஒப்பந்தம் வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் டிச. 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

புதிய ஊதிய ஒப்பந்தம் வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் டிச. 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஓராண்டுக்கு மேலாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதைக் கண்டித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரு கின்றன. இதற்கிடையே, போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் மாதம் ரூ.1000 இடைக் கால நிவாரணமாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், துணைத் தலைவர் சந்திரன் உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘அரசு அறிவித் துள்ள இடைக்கால நிவாரணம் ஜனவரி முதல் வழங்கப்படும் என்றால் ஊதிய ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள் ளதா என்ற கேள்வி எழுகிறது. கடந்த செப்டம்பர் முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்தி இருக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், கடந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை நடைமுறைப்படுத்த கோரியும் வரும் 29-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதிமுக தொழிற்சங்கத்தை தவிர மற்ற 11 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள்’’ என்றார்.

சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர் சந்திரன் ஆகியோர் கூறும் போது, ‘‘28 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். போராட்ட விளக்க கூட்டம் 26-ம் தேதி பல்லவன் இல்லத்தில் நடக்கிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in