Published : 08 Dec 2014 10:02 AM
Last Updated : 08 Dec 2014 10:02 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் மாசடையாத கூவத்தை பாதுகாக்கக் கோரி ஒன்றுதிரண்ட கிராம மக்கள்

மாசுபடாத கூவம் நதி பகுதிகளை பாதுகாக்க வலியுறுத்தி பட்டாபிராம் அருகே கூவம் நதிக்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், 6 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். சென்னை மாநகரில் பாயும் நதிகளில் ஒன்று கூவம். காலப்போக்கில் மிகவும் மாசடைந்த நதியாக மாறிவிட்ட இந்த நதி, வேலூர் மாவட் டத்தில் உள்ள கேசாவரம் அணைக்கட்டிலிருந்து, கல்லாறின் கிளை நதியாக உருவாகி, சென்னை வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. மொத்தம் 75 கி.மீ. நீளமுள்ள இந்த நதி, சென்னையில் மட்டும் சுமார் 30 கி.மீ தூரம் பாய்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து இந்த நதி மாசடைந்து போனது அனைவரும் அறிந்ததே. எனினும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 40 கி.மீ. தூரத்துக்கு கூவம் நதி மாசடையாமல் உள்ளது என்ற தகவல் நிச்சயம் சென்னைவாசிகளுக்கு வியப்புக்குரிய தகவலாகவே இருக்க முடியும்.

அதேநேரத்தில் கூவம் நதியின் மாசடையாத பகுதியை சீரழிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு மெல்ல அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆவடி பெரு நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சியின் குப்பை மற்றும் பாதாள சாக்கடை கழிவுகள், மாசடையாத கூவம் நதியில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மாசுபடாத கூவம் நதி பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்பினர் ஒன்று சேர்ந்து, ‘மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழு’ என்ற அமைப்பினை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு சார்பில், மாசுபடாத கூவம் நதி பகுதிகளை காப்பாற்ற கோரி, பட்டாபிராம் அருகே கூவம் நதிக்கரையில் உள்ள அணைக்கட்டுச் சேரியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

ஓய்வுப் பெற்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நந்தபாலன், ‘மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழுவின்’ ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், 6 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணை தலைவர், 15 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:

கூவம் நதியின் மாசடையாத பகுதிகளை சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தவேண்டும். மாசடையாத கூவம் நதியில் ஒரு கி.மீ.க்கு ஒரு அணை என சுமார் 40 அணைகளை அரசு அமைக்கவேண்டும். நகராட்சி, பேரூராட்சி கழிவுகளை மாசுபடாத கூவம் ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும். கூவம் ஆறு புனரமைப்பு மற்றும் கூவம் ஆறு தொடர்பான திட்டங்களுக்கு, ‘மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்புக் குழு’ மற்றும் மாசடையாத கூவம் கரையோர கிராம மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என பல கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தின் வழியாக பாயும் மாசுபடாத கூவம் நதியில் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றி வழிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x