பாஜக அரசிடம் கண்ணியமில்லை: வைகோ கடும் தாக்கு

பாஜக அரசிடம் கண்ணியமில்லை: வைகோ கடும் தாக்கு
Updated on
1 min read

‘மோடி மீதான தமிழர்களின் நம்பிக்கை துடைத்து எறியப்பட்டுள்ளது’ என்று வைகோ தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 27-ம் தேதி மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தேன். அது நியாயமான விமர்சனம். இன்னும் தொடர்ந்து செய்வேன். காத்மண்டில் சார்க் மாநாட்டுக்கு சென்ற நரேந்திர மோடி, தமிழ் இன அழிப்பை செய்யும் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறார். இது பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டது.

நேரு காலத்தில் இருந்து பிரதமராக இருந்த யாரும் இப்படி சொன்னதில்லை. இன்னொரு நாட்டின் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என, ஒரு மாநாட்டில் சொல்வது தவறு. இதைத் தான் நான் பேசினேன். இப்போதும் அந்த கருத்தில் உறுதியாக உள்ளேன்.

வைகோ நாவை அடக்காவிட்டால் தமிழகத்தில் நடமாட முடியாது என, ஹெச்.ராஜா பேசி உள்ளார். அந்த செய்தி கேள்விப் பட்டதும் நான் தொண்டர்களை அடக்கி வைத்தேன். கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என சுப்பிரமணியசுவாமி மிரட்டுகிறார். இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியம் மிக்கவர்கள். அந்த அணுகுமுறையில் ஒரு சதவீதம் கூட நரேந்திரமோடி தலைமையிலான அரசிடம் இல்லை.

5 மீனவர்களை மீட்டு வந்தது மிகப்பெரிய நாடகம். மோடியின் மீது தமிழர்களுக்கு இருந்த நம்பிக்கை துடைத்து எறியப்பட்டுள்ளது, என்றார் அவர்.

நாகர்கோவிலில் கொடி ஏற்றி வைத்து பேசுகிறார் வைகோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in