Published : 05 Dec 2014 10:17 AM
Last Updated : 05 Dec 2014 10:17 AM

திமுக எம்எல்ஏ.க்கள் 2 முறை வெளிநடப்பு: கம்யூனிஸ்ட், காங்., தேமுதிக கட்சிகளும் வெளியேறின

சட்டசபையிலிருந்து திமுக எம்எல்ஏ.க்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர். முதல்வர் பேசும்போது குறுக்கீடு செய்ததாக, திமுக எம்எல்ஏ, ஜெ.அன்பழகன் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று அவை காலை 10 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரத்தில் எம்எல்ஏ,க்களின் துறை ரீதியான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கேள்வி நேரம் காலை 11.30 மணிக்கு முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் கட்சித் தலைவர் சவுந்தரராஜன் தலைமையிலான எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று, ’மக்கள் பிரச்சினைகளைப் பேச பேரவைக் கூட்ட நாட்களை அதிகப்படுத்துக’ என்று எழுதப்பட்ட காகிதங்களை கையில் ஏந்தி நின்று பேசுவதற்கு அனுமதி கேட்டனர். அப்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டனர்.

இதே கோரிக்கையுடன், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்துப் பேச திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ.க்கள் எழுந்து நின்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டனர். இதேபோல் தேமுதிக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்றதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சபாநாயகர் தனபால், ‘மக்கள் பிரச்சினை தொடர்பாக அவையில் மூன்று முக்கிய கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது. எனவே, அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். அலுவல் ஆய்வுக் குழு குறித்து பேச சபை விதிப்படி அனுமதியில்லை. எனவே அனைவரும் அமருங்கள்’ என்றார். மார்சிஸ்ட் உறுப்பினர்களைப் பார்த்து, ‘உங்களிடம் இப்படி நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

அப்போது அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் எழுந்து, ‘உங்களது பெரும்பாலான கோரிக்கைகளை அவைத் தலைவர் ஏற்றுள்ளார். இந்த நிலையில், அனுமதியின்றி நீங்கள் அவைக்குள் ஒரு பேப்பரைக் கொண்டு வந்து காட்டி, அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக் கூடாது. அவையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்றார்.

ஆனாலும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் தொடர்ந்து எழுந்து நின்றதால், ‘மக்கள் பிரச்சினைகளை சபையில் பேசவிடாமல் தடுக்காதீர்கள்’ என்று சபாநாயகர் எச்சரித்தார்.

இதையடுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘முல்லைப் பெரியாறு வெற்றிக்கு காரணமான அதிமுக பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறும் முக்கியத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அரசியல் லாபம் தேடும் நோக்கில் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது,’என்றார்.

அப்போது திமுக எம்எல் ஏ.க்கள் கூச்சலிட்டு பேச அனுமதி கேட்டனர். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஸ்டாலினும் தொடர்ந்து அனுமதி கேட்டபடி எழுந்து நின்றார். அப்போது, 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்ட நிலை குறித்து, சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் என்று கூறி, தேமுதிக எம்எல்ஏ. பார்த்தசாரதியை பேச அழைத்தார். அப்போது திமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ.க்களும் அவை நாட்கள் நீட்டிப்பு குறித்து பேச வாய்ப்பளிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டு, மீண்டும் அவைக்குத் திரும்பினர்.

இதற்கிடையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திமுக எம்எல்ஏ, ஜெ.அன்பழகன் எழுந்து நின்று, முதல்வர் மற்றும் அவரது அருகில் காலியாக இருந்த இருக்கையைக் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்த பிரத்யேக இருக்கை) காட்டி ஏதோ கூறி, பேசுவதற்கு அனுமதி கேட்டார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் அவர் தொடர்ந்து முதல்வர் பேசும்போது, குறுக்கீடு செய்து பேச அனுமதி கேட்டார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவரை இரண்டு, மூன்று முறை எச்சரித்து விட்டு பின்னர், அவரை அவைக் காவலர்கள் வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதேபோல், முல்லைப் பெரியாறு குறித்த தீர்மானத்தின் போது,’முல்லைப் பெரியாறு வெற்றிக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் முக்கியக் காரணம். அவரது வலியுறுத்தலில் தான் மிட்டல் கமிட்டி அறிவிக்கப்பட்டு, அந்த அறிக்கை அடிப்படையில் சாதகமான தீர்ப்பு வெளியானது. எனவே, தீர்மானத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரின் பெயர் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் இது அதிமுக பொதுக்குழுவின் தீர்மானமாக, ஜெயலலிதாவுக்கு புகழாரம் என்று எதிர்ப்பேன்’’ என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கூறினார்.

ஆனால், தீர்மானத்தில் மாற் றம் கொண்டு வர ஒப்புதல் அளிக் காததால், திமுக எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x