

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 70 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதில் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் கணிசமான பங்குள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் காய்கறி சாகுபடி பரப்பை அதிகரித்து அதன் மூலம் 70 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கி வருகிறது மாவட்ட தோட்டக்கலைத் துறை.
இதுகுறித்து, மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
காய்கறி தேவை அதிகம் உள்ள சென்னை மாநகருக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி சாகுபடி கணிசமாக நடந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், சோழ வரம், கும்மிடிப்பூண்டி, பூண்டி, திருவள்ளூர், எல்லாபுரம், திருத்தணி, ஆர்.கே. பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை, பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்படுகின்றன.
விவசாயிகளுக்கு தொடர் வருவாய் தரும் இந்த காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டில் 2,908 ஹெக்டர் நிலப் பரப்பில் கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்பட்டு 58, 771 மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்யப்பட்டன.
இந்நிலையில் நடப்பு ஆண் டான 2014-15-ம் ஆண்டில் காய்கறி சாகுபடி பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிக்க மாவட்ட தோட்டக்கலைத் துறை திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கை யில் ஈடுபட்டுவருகிறது.
அதன்படி, கார்த்திகை மற்றும் தை பட்டத்தில், 4 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் காய்கறி சாகுபடி செய்து, 70 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்காக, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு, மாநில அரசின் 50 சதவீத மானியத்தில் வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் வழங்கப் படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத் தில் முழுமானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத் தில், மண்புழு உரம் தயாரிக்க மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், 3 ஆயிரம் ச.மீ., பரப்பளவில் நிழல் குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காய்கறி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர்பாசன வசதியை சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் ஏற்படுத்தியும் தருகிறது தோட்டக்கலைத் துறை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.